பீகார் மாநிலம், கந்தகி ஆற்றில் பாலம் இடிந்து விபத்து
பீகார் மாநிலம், கந்தகி ஆற்றில் பாலம் இடிந்து விபத்து

பீகாரில் அடுத்தடுத்து சரிந்து விழும் பாலங்கள்: 15 நாள்களில் 7 பாலங்கள் இடிந்தன

பீகார் மாநிலத்தில் அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் நிகழ்வுகள் வாடிக்கையாகி உள்ளது. அம்மாநிலத்தில் கடந்த 15 நாள்களில் 7 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன.

பீகார் மாநிலம், சிவான் மாவட்டம், கந்தகி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்தது. தியோரியா தொகுதியில் அமைந்துள்ள இந்த சிறிய பாலம், பல கிராமங்களை மஹ்ராஜ்கஞ்ச் பகுதியுடன் இணைக்கிறது. பீகாரில், கடந்த 15 நாள்களில் இதுபோன்று நிகழ்ந்த 7வது சம்பவம் இதுவாகும்.

சிவன் மாவட்டத்தில் கடந்த 11 நாட்களில் பாலம் இடிந்து விழும் 2வது சம்பவம் இதுவாகும். இந்த விபத்துகளில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பாலம் இடிந்து விழுவதற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக துணை மேம்பாட்டு ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக முகேஷ் குமார் மேலும் கூறுகையில், “அதிகாலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. முதற்கட்ட தகவலின்படி, இந்த பாலம் 1982-83ம் ஆண்டில் கட்டப்பட்டது. கடந்த சில நாட்களாக பாலத்தில் பழுதுபார்க்கும் பணிகள் நடந்து கொண்டிருந்தன. நான் மற்றும் துறை சார்ந்த மூத்த அதிகாரிகள் ஏற்கெனவே அந்த இடத்தை அடைந்துள்ளோம்” என்றார்.

பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்
பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழும் பாலங்கள்

அப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கந்தகி ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பலவீனமாக இருந்த பாலம் இடிந்து விழுந்திருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.

எனினும் பீகாரில் தொடர்ந்து பாலங்கள் இடிந்து விழுந்து வரும் சம்பவம், அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in