வயநாடு தொகுதி மக்களுக்கு ராகுல் காந்தி பெரும் துரோகம்... ஆனி ராஜா ஆவேசம்

ராகுல்காந்தி - ஆனி ராஜா
ராகுல்காந்தி - ஆனி ராஜா
Updated on
2 min read

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வென்றிருக்கும் ராகுல் காந்தி தற்போது அந்த தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக எழுந்த தகவலால் அங்கு புதிய அரசியல் சர்ச்சை எழுந்துள்ளது

2019 மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளத்தின் வயநாடு என 2 தொகுதிகளில் போட்டியிட்டார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக முன்நின்ற ராகுலை, அமேதியின் பாஜக வேட்பளரான ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இதனால் வயநாடு எம்பியாக 5 ஆண்டுகளுக்கு தனது மக்களவை பணியை ராகுல் தொடர்ந்தார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

2024 மக்களவைத் தேர்தலில் மீண்டும் இரட்டைத் தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேரளத்தின் வயநாடு தொகுதியில் மட்டுமே அவ்ர் போட்டியிட்டார். கேரளத்தின் ஆளும் இடதுசாரிகள் சார்பாக ஆனி ராஜா, வய நாடு தொகுதியில் போட்டியிட்டார். உத்தர பிரதேசத்தை விட்டு வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவதற்கு இடது சாரிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ஆனபோதும் தனது வெற்றிகரமான பிரச்சாரம் வாக்குப்பதிவு அனைத்தும் முடித்தப் பின்னர், தான் போட்டியிடும் இரண்டாவது தொகுதி குறித்து ராகுல் காந்தி அறிவித்தார். அதன்படி உத்தரபிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மனுத்தாக்கல் செய்து பிரச்சார களம் கண்டார். தேர்தல் முடிவுகளில் வயநாடு, ரேபரேலி என இரு தொகுதிகளிலும் ராகுல் காந்தி வென்றுள்ளார். எனவே தற்போது இந்த 2 தொகுதிகளில் ஒன்றை ராகுல் ராஜினாமா செய்தாக வேண்டும்.

அரசியல் கட்சித் தலைவர்கள் இரு தொகுதிகளில் போட்டியிடுவது வழக்கம் என்றபோதும், இரண்டிலும் வெற்றி பெறும்போது அவற்றில் ஒன்றில் மட்டுமே எம்பியாக அவரால் நீடிக்க முடியும். இதன்படி ரேபரேலி - வயநாடு என இரண்டில் ஒரு தொகுதியின் எம்பி பொறுப்பிலிருந்து அவர் ராஜினாமா செய்ய இருக்கிறார். அந்த ராஜினாமா தொகுதி வயநாடு என்பதாக வெளியான தகவல்களை அடுத்து, வயநாடு தொகுதியில் ராகுலை எதிர்த்துப் போட்டியிட்ட ஆனி ராஜா தற்போது கொதித்துப் போயுள்ளார்.

ஆனி ராஜா
ஆனி ராஜா

“இரு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது குறித்து முன்கூட்டியே வயநாடு மக்களுக்கு ராகுல் காந்தி தெரிவிக்கவில்லை. மேலும், வென்ற பின்னர் வயநாடு எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வது, வயநாடு தொகுதி மக்களுக்கான பெரும் துரோகமாக அமையும்” என்று கொதிப்பு காட்டியுள்ளார். மேலும் வயநாடு தொகுதியில் மீண்டும் தான் போட்டியிடுவது குறித்து இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். வயநாடு தொகுதியில் 6,47,445 வாக்குகளுடன் ராகுல் காந்தி வென்றுள்ளார்; சிபிஐ கட்சி வேட்பாளர் ஆனி ராஜா 2,83,023 வாக்குகளுடன் அங்கே வெற்றி வாய்ப்ப இழந்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in