இளையராஜாவுக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்... அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

இளையராஜாவுடன் அன்புமணி ராமதாஸ்.
இளையராஜாவுடன் அன்புமணி ராமதாஸ்.

இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருது உள்ளிட்ட அனைத்து அங்கீகாரங்களும் இளையராஜாவுக்கு வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், இளையராஜாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ் மக்கள் மற்றும் இசை ரசிகர்களின் செவிகளில் நுழைந்து இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் உலகின் தலைச்சிறந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா அவர்களுக்கு அவரது 82-ம் பிறந்தநாளையொட்டி, எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இசைச்சக்கரவர்த்தியான அவர் நூற்றாண்டு காணப் பிரார்த்திக்கிறேன்.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்திற்கு இசை சேவை செய்து வரும் இளையராஜா, அகவை 80-ஐக் கடந்து சேவை செய்வதை நிறுத்திக் கொள்ளவில்லை. ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், அடுத்து அமைத்திருக்கும் சிம்பொனி இசையைக் கேட்டு மயங்க இசை ரசிகர்களுடன் இணைந்து நானும் காத்திருக்கிறேன்.

இளையராஜா சமூகத்திற்கு செய்த பணிகளுக்கு இணையான அங்கீகாரத்தை அவருக்கு நாம் வழங்கவில்லை என்ற குறை எப்போதும் எனக்கு உண்டு. இந்தியாவின் மிக உயர்ந்த பாரதரத்னா விருது உள்ளிட்ட அனைத்து அங்கீகாரங்களும் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற எனது நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும் என்று நம்புகிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in