
சென்னையில் இருந்து விமானத்தில், சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.28 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க கரன்ஸியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிங்கப்பூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று இரவு 10:30 மணி அளவில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள் பரிசோதித்து, அனுப்பி கொண்டு இருந்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த 35 வயது ஆண் பயணி ஒருவர், சுற்றுலா விசாவில், சிங்கப்பூர் செல்வதற்காக வந்தார். அவர் மீது சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதை அடுத்து அவரை நிறுத்தி விசாரித்தனர்.
விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்து சென்று, முழுமையாக பரிசோதித்தனர். ஆடைகளில் எதுவும் மறைத்து வைத்திருக்கவில்லை.
அவருடைய சூட்கேஸ் மற்றும் பைகளை பரிசோதித்தனர். அதில் சூட்கேசில் ரகசிய அறை இருப்பது தெரிய வந்தது. அதனை திறந்து பார்த்த போது, கட்டு கட்டாக, அமெரிக்க கரன்சி மறைத்து வைக்கப்பட்டிருந்தது.
28 லட்ச ரூபாய் மதிப்புடைய கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரது சிங்கப்பூர் பயணத்தையும் ரத்து செய்தனர். மேலும் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், அவர் வெளிநாட்டுக்கு கரன்சியை கடத்தும் குருவி என்பது தெரிய வந்துள்ளது.