டெல்லியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்… அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்?

டெல்லியில் அதிமுக மூத்த நிர்வாகிகள்… அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்?
Updated on
1 min read

டெல்லி சென்றுள்ள அதிமுக மூத்த நிர்வாகிகள், பாஜக கட்சி தலைமையை சந்தித்து, அண்ணாமலை மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாஜக – அதிமுக இடையேயான உறவு நீறுபூத்த நெருப்பாக இருந்து வருகிறது. அண்ணா குறித்து அண்ணாமலை கூறிய கருத்து தமிழ்நாடு அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதிமுக மூத்த தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர், கண்டனமும் தெரிவித்தனர்.

பாஜக உடன் அதிமுக கூட்டணியில் இல்லை என்று ஜெயக்குமார் அதிரடியாக தெரிவித்தார். பாஜகவினரும் அதிமுகவுக்கு பதிலடி கொடுத்தனர். இவ்வளவு நடந்தும் அண்ணா குறித்த கருத்தில் மாற்றமில்லை என்று அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக இருதரப்பிலும் சமாதான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது. பாஜகவினரை விமர்சிக்க வேண்டாம் என்று அதிமுக தலைமை கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்பட்டது.

பாஜக தலைமையும் அதிமுக பற்றி பேச வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு கண்டிஷன் போட்டதாக பேசப்பட்டது. இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் திடீரென டெல்லி சென்றுள்ளனர். அதுவும் சென்னையில் இருந்து செல்லாமல், கொச்சினில் இருந்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகிய பேரும் டெல்லி சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை சந்தித்து அண்ணாமலை குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அதிமுக மூத்த நிர்வாகிகள் நேரம் கேட்டதாகவும், ஆனால் அமித்ஷா நேரம் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in