கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் சட்டப் பேரவைக்கு 2வது நாளாக இன்றும் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். அவை கூடியதுமே பிரச்னையை விவாதிக்க அனுமதி கோரி அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண விவகாரத்தை கண்டித்து, அதிமுக உறுப்பினர்கள் நேற்று கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். பேரவையில் இந்த விவகாரத்தை எழுப்பி நேற்று அமளியில் ஈடுபட்டனர்.
பேரவைத் தலைவர் அப்பாவு, அமைதி காக்குமாறும், உரிய நேரத்தில் பேச வாய்ப்பு அளிக்கப்படும் என கோரிக்கை விடுத்தும் அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தை கண்டித்து தொடர்ந்து 2வது நாளாக அதிமுக உறுப்பினர்கள் இன்றும் சட்டப் பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து வந்தனர்.
இந்நிலையில் பேரவைக் கூட்டம் தொடங்கியதும் கேள்வி - பதில் நேரம் முடிந்ததும் அதிமுகவினர், கள்ளச்சாராய விவகாரத்தை உடனடியாக விவாதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து சபாநாயகர், பிரச்சினை குறித்து பேச அனுமதிக்கப்படும் உரிய நேரம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால், அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். பின்னர், அவையிலிருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி, அதிமுகவின் அனைத்து உறுப்பினர்களும் பேரவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.