
சென்னை திருவொற்றியூரில் தந்தையை கொன்றுவிட்டு, மயங்கி விழுந்து இறந்ததாக நாடகமாடிய மகனை இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்தனர்.
திருவெற்றியூர், ராஜா கடை சிவகங்காபுரத்தை சேர்ந்த பாண்டியன் (48) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு சென்று விட்டு குடிபோதையில் வீட்டுக்கு வந்த பிறகு கழிவறையில் மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிரேத பரிசோதனையில் பாண்டியன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. எனவே, திருவொற்றியூர் போலீஸார் கொலை வழக்காக பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இரண்டரை ஆண்டுகள் ஆன பிறகும் கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸார் திணறினர்.
பிரேத பரிசோதனை அறிக்கை குறித்து போலீஸார் மேல் முறையீடு செய்த போது, பாண்டியன் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதை மருத்துவர் மீண்டும் உறுதி செய்தார். இதையடுத்து மறுபடியும் பாண்டியனின் மனைவி மற்றும் மகனை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் அவருடைய மகன் ரஞ்சித்குமார் (21) தனது தந்தை குடித்து விட்டு வந்து தாயாரிடம் தகராறு செய்ததால் ஆத்திரத்தில் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, கழிவறையில் மயங்கி விழுந்ததாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து ரஞ்சித்குமார் மீது கொலை வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.