சட்டப்பேரவையில் அமளி; அதிமுகவினர் மீண்டும் வெளியேற்றம்!

சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
சட்டப்பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்

சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் 2வது நாளாக வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், சபாநாயகர் நடுநிலையோடு நடந்து கொள்ளவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் விவகாரத்தை முன்னிலைப்படுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக அதிமுக உறுப்பினர்கள் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தருவதோடு, தொடர் அமளியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 5வது நாள் சட்டப்பேரவை கூட்டம் துவங்கிய நிலையில், அதிமுகவின் சட்டப்பேரவை கொறடா எஸ்.பி.வேலுமணி கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானத்திற்கான மனுவை சபாநாயகரிடம் வழங்கியிருந்தார்.

சபாநாயகர் அப்பாவு
சபாநாயகர் அப்பாவு

ஆனால் கூட்டம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இந்த மனு வழங்கப்பட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் அதனை சபாநாயகர் நிராகரித்தார். தொடர்ந்து கேள்வி நேரம் முடிந்த பின்பு இந்த விவகாரம் குறித்து விவாதிக்க அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்து அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுகவினர் வெளியேற்றப்பட்டதை தொடர்ந்து பேசிய சபாநாயகர் அப்பாவு, ”அவையின் மாண்பைக் குறைக்கும் நோக்கத்தோடு அதிமுகவினர் செயல்படுகின்றனர். மக்கள் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டிய கேள்வி நேரத்தில் இடையூறு ஏற்படக்கூடாது. சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதம் நடைபெற உள்ளதால் வெளியேறினார்களா? வெளிநடப்பு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அதிமுகவினர் குறியாக இருக்கின்றனர். ஒத்திவைப்பு தீர்மானத்தை ஒரு மணி நேரத்துக்கு முன்பாக கொடுக்க வேண்டியது அவசியம்”என்றார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை
தமிழ்நாடு சட்டப்பேரவை

சட்டப்பேரவை வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசும் போது, “சபாநாயகர் நடுநிலையோடு செயல்பட வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செயல்படவில்லை. கள்ளச்சாராய விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயம் என்பதால் விவாதிக்க கோரினோம். சபாநாயகர் நாற்காலியில் அமர்ந்து கொண்டு அரசியல் பேசக்கூடாது. வேண்டுமென்றால் பதவியை ராஜினாமா செய்து விட்டு சபாநாயகர் அப்பாவு அரசியல் பேசட்டும். சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானத்திற்காக வெளியேறினோம் என்று கூறுவது தவறு. மக்கள் பிரச்சினைகளை மூடி மறைக்கவே சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை கையில் எடுத்து உள்ளார்கள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வருவதால் சாதிவாரி கணக்கெடுப்பு எனக் கூறுகின்றனர்” என்றார்.

இதனிடையே அவையின் மாண்புகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் அதிமுகவினரை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானத்தை அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தார். இதனை ஏற்று தொடர் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை, இந்த பேரவை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in