சட்டப்பேரவையில் அமளி; அதிமுகவினர் கூண்டோடு வெளியேற்றம்... பேரவை கூட்டத்தில் பங்கேற்க தடை!

சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
சட்டப் பேரவையிலிருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றம்
Updated on
2 min read

கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி 3வது நாளாக அமளியில் ஈடுபட்ட அதிமுகவினர் சட்டப்பேரவையில் இருந்து இன்று கூண்டோடு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூலை 20ம் தேதி துவங்கி 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி துவங்கிய அன்று, கருப்பு சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வருகை தந்த அதிமுகவினர், கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி முழக்கங்களை எழுப்பி அதிமுகவினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால் வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்
சட்டப்பேரவை கூட்டத்தொடர்

நேற்று தமிழ்நாடு முழுவதும் அதிமுக சார்பில் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதனால் அதிமுகவினர் யாரும் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இன்று கூட்டத்தொடர் துவங்கிய போது, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கருப்பு சட்டை அணிந்து பேரவைக்கு வருகை தந்தனர். கூட்டத்தொடர் துவங்கியதும் கள்ளக்குறிச்சி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அதிமுகவினர் அனைவரையும் பேரவையிலிருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். மேலும் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்ட வார்த்தைகள் எதுவும் சட்டப்பேரவை குறிப்பில் இடம் பெறாது எனவும் சபாநாயகர் அறிவித்தார். இன்று ஒருநாள் முழுவதும் பேரவை கூட்டத்தில் பங்கேற்கவும் அதிமுகவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

இதனிடையே இந்த விவகாரம் குறித்து பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”தேவையற்ற பிரச்சினையை அதிமுக சட்டப்பேரவையில் ஏற்படுத்துகிறது. விஷச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டு கலவரத்தை உருவாக்குவதற்காக அதிமுகவினர் அமளியில் ஈடுபடுகின்றனர். மக்களவைத் தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வென்றதை பொறுக்க முடியாமல் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேள்வி நேரம் முடிந்த பிறகு விவாதிக்கலாம் என சபாநாயகர் கூறியும் அதிமுகவினர் அதனை ஏற்கவில்லை. அதிமுகவினரின் ஆர்ப்பாட்டத்தை தவறு என்று சொல்லவில்லை. போராடுவதற்கு அவர்களுக்கு உரிமை உண்டு” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in