அதிகாலையில் அதிர்ச்சி... அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் ஓட ஓட விரட்டிக் கொலை!
சென்னையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் மர்மநபர்களால் இன்று அதிகாலையில் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செங்குன்றத்தை அடுத்துள்ள பாடியநல்லூர் எம்.ஏ நகர் திலகர் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன் (53). அதிமுக பிரமுகரும், பாடியநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான பார்த்திபனுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். மேலும் இவர் மீது ஆந்திர மாநிலம் கடப்பா காவல் நிலையத்தில் செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியளவில் பார்த்திபன் வழக்கம் வீட்டில் இருந்து நடைபயிற்சிக்கு சென்று கொண்டிருந்தார். பாடியநல்லூர் கோயில் மைதானம் அருகே சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஓன்று பார்த்திபனை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதனால் உயிருக்குப் பயந்து ஓடிய பார்த்திபனை அந்த கும்பல் ஓட ஓட விரட்டிச் சென்று கொடூரமாக வெட்டிக் கொலை செய்து விட்டு பைக்குகளில் தப்பிச் சென்றது.
இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். இதன் பேரில் அங்கு சென்ற போலீஸார், பார்த்திபன் உடலை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இக்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பார்த்திபன் சட்டவிரோதமாக செம்மரக்கட்டை கடத்தலில் ஈடுபட்டு வந்ததால் தொழில் போட்டி காரணமாக அவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பார்த்திபனின் அண்ணன் நடராஜன் பிரபல ரவுடி என்பதும், அவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் அதிகாலையில் நடுரோட்டில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.