கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் நடிகர், தவெக தலைவர் விஜய் நேற்று நேரில் நலம் விசாரித்தார். இந்த விஷயம் பேசுபொருளான நிலையில் விஜயை ‘பிக் பாஸ்’ அனிதா சம்பத் விமர்சித்ததாக ஒரு செய்தி பரவியது.
கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அரசுக்கு பல தரப்பினரும் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர். 50க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க நடிகர், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை கள்ளக்குறிச்சி விரைந்தார்.
இந்த செய்தியை பதிவு செய்திருந்த ஊடகம் ஒன்றின் கமெண்ட்டில் செய்தி வாசிப்பாளர், பிக் பாஸ் புகழ் அனிதா சம்பத் ‘நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்ப தீவிரவாதிகளிடம் நேருக்கு நேர் தாக்கும் போது நெஞ்சில குண்டு பட்டு ஹாஸ்பிடல்ல கவலைக்கிடமா இருக்காங்க பாவம்’ என்று கேலி செய்யும் தொனியில் பதிவிட்டிருந்தார்.
இதுதான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சில செய்தி ஊடகமும், விஜய் ரசிகர்களும் அனிதா நடிகர் விஜயை தான் கிண்டல் செய்கிறார் என்று கொதித்தெழுந்தனர். இதற்குதான் அனிதா சம்பத் விளக்கம் கொடுத்திருக்கிறார்.
‘நடிகர் விஜயை குறிப்பிட்டு நான் கமெண்ட் செய்யவே இல்லை. அவர் அரசியலுக்கு வருவது எனக்கு சந்தோஷம்தான். குழந்தைகளை கூட கவனிக்காமல் ரொம்ப ஏழ்மையான சூழ்நிலையில் இருந்தும், காசு கொண்டு போய் கள்ள சாராயம் குடித்து ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகி இருக்காங்க.
அவங்களை தியாகி மாதிரி காட்டி இருக்காங்கன்னுதான் சொல்றேன். மற்றபடி விஜய் அவர்களை சந்திப்பது குறித்து நான் எதுவும் சொல்லவில்லை. உலகத்துல எத்தனையோ பேரு அஞ்சு பத்துன்னு சேர்த்து வைத்து பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க. அப்படிப்பட்ட அப்பாக்கள் இருக்கிற நம்ம ஊரில, இப்படி ஊதாரித்தனமா சுத்திட்டு இருக்கறதை பார்க்கவே கஷ்டமா இருக்கு. இவங்களுடைய குடும்பமும் பாவம். அவங்களுக்கு கடவுள்தான் தைரியம் கொடுக்கனும். என்னுடைய கமெண்ட்டுடைய அர்த்தம் புரிஞ்சுக்கிட்டவங்களுக்கு நன்றி’ எனக் கூறியுள்ளார்.