நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக ‘மகாராஜா’ வெளியாகியுள்ளது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், படத்திற்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது.
’மகாராஜா’ பட விழாவில் இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன், நடிகர் விஜய்சேதுபதி எனப் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இதில் விஜய்சேதுபதி பேசியதாவது, “இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது.
தயாரிப்பாளருக்கும் போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம். இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது.படத்தைப் பார்த்து, ரசித்து எங்களுக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி” என்றார்.