நடிகர் விஜய்
நடிகர் விஜய்

தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது... நடிகர் விஜய் குற்றச்சாட்டு!

"அரசியலும் ஒரு துறையாக எதிர்காலத்தில் நம் மாணவர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர முடியும் என்று நம்புகிறேன்" என தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் நடிகர் விஜய் கூறினார்..

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் கல்வி விருது வழங்கும் விழாவின் இரண்டாம் ஆண்டு நிகழ்வு இன்று தொடங்கியது. நிகழ்வுக்கு பத்து மணியளவில் வந்த விஜய் மேடையில் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், "எல்லாத் துறையும் நல்ல துறை தான். நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் நூறு சதவீத உழைப்பைக் கொடுங்கள். அந்தத் துறை பற்றி உங்கள் பெற்றோர், ஆசிரியர், கரியர் கவுன்சிலர்களிடம் பேசுங்கள்.

இதில் என்னுடைய அனுபவம் பற்றியும் சொல்ல விரும்புகிறேன். மருத்துவம், பொறியியல் மட்டும்தான் நல்ல துறை என்று சொல்ல முடியாது. அதைத்தாண்டி நமக்குத் தேவைப்படுவது நல்ல தலைவர்கள். இதை நான் அரசியல் ரீதியாக சொல்லவில்லை.

தவெக தலைவர் நடிகர் விஜய்
தவெக தலைவர் நடிகர் விஜய்

துறை ரீதியாகவும் நல்ல தலைவர்கள் தேவை. அரசியலும் ஒரு துறையாக எதிர்காலத்தில் நம் மாணவர்கள் மத்தியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். படித்தவர்கள் நல்ல தலைவர்களாக வர முடியும் என்று நம்புகிறேன். நீங்கள் படிக்கும்போதே மறைமுகமாக அரசியலில் ஈடுபட முடியும். தினமும் செய்தித்தாள் படியுங்கள்.

ஊடகங்களுக்கு இணையாக சமூக ஊடகங்களும் வளர்ந்து வருகிறது. எல்லாவற்றையும் கவனியுங்கள். எது நல்லது, எது கெட்டது என்று பிரித்து பாருங்கள். அப்போதே, நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் விசாலமான பார்வை வந்துவிடும். அதுதான் உங்களுடைய அரசியல் பங்களிப்பு. பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, உங்களுடன் அதிகம் இருப்பது நண்பர்கள்தான். அதனால், நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுங்கள்.

தவறான பழக்கங்களில் ஈடுபட்டு, உங்கள் அடையாளத்தை இழந்து விடாதீர்கள். ஏனெனில், நம் தமிழ்நாட்டில் போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகமாகி விட்டது. ஒரு பெற்றோர், அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில் இதைப் பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கிறது.

நடிகர் விஜய்
நடிகர் விஜய்

ஆளும் அரசு இதைத் தவறவிட்டது. ஆனால் அதை பேசுவதற்கான மேடை இதுவ இல்லை. நம்மை நாம்தான் பார்த்துக் கொள்ள வேண்டும். ‘Say no to temporary pleasures, Say no to drugs' இந்த உறுதிமொழியை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி மாணவர்களையும் இதை சொல்ல வைத்தார். பின்பு, “தோல்வியைப் பார்த்துப் பயப்படாதீர்கள். அதில் இருந்து கற்றுக் கொள்ளுங்கள்” என்ற அறிவுரையோடு தனது பேச்சை முடித்துக் கொண்டார் விஜய். அதன் பிறகு, மாணவர்களுக்கு சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கும் நிகழ்வு தொடங்கியது.

x
காமதேனு
kamadenu.hindutamil.in