”’கருப்பன்’ படத்தில் விஜய்சேதுபதி நல்லதுக்காக படம் முழுக்க வந்திருப்பேன். ஆனால், ’மகாராஜா’ படத்தில் அவர் நிம்மதியைக் கெடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்” என்று நடிகர் சிங்கம்புலி பேசியிருக்கிறார்.
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கிறது ‘மகாராஜா’. இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருப்பார் நடிகர் சிங்கம்புலி. இவரின் கதாபாத்திர அனுபவம் மற்றும் சினிமா பயணம் பற்றி ‘இந்து தமிழ் திசை’ யூடியூப் சேனலுக்காக நேர்காணல் செய்தோம்.
அதில் அவர், “முன்பெல்லாம் என்னைப் பார்த்தால் மக்கள் சிரித்து மகிழ்வார்கள். ஆனால், ‘மகாராஜா’ படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தைப் பார்த்ததில் இருந்து, நிறைய ரசிகர்கள் திட்ட ஆரம்பித்து இருக்கிறார்கள். வெகுஜன ரசிகர்களைக் கூட விட்டுவிடலாம். சினிமா துறையில் இருக்கும் சிலரே, ’நான் ஒரு பொண்ணு வச்சிருக்கேன். ஏன் இப்படி பண்ணிட்டே?’ என்றெல்லாம் கேட்டது தான் எனக்கு வருத்தம்.
இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு அப்போது தான் நெருடலாக உணர்ந்தேன். இதற்கு முன்பு விஜய்சேதுபதியுடன் பல படங்கள் நடித்திருக்கிறேன். குறிப்பாக ‘கருப்பன்’ படத்தில் அவர் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் படம் முழுக்க வருவேன்.
ஆனால், ‘மகாராஜா’ படத்தில் அவர் நிம்மதியைக் குலைக்கும் கதாபாத்திரம் எனக்கு. இந்தக் கதாபாத்திரம் நான் ஒத்துக் கொண்டு நடித்தது ரொம்ப மகிழ்ச்சி என விஜய்சேதுபதியும் சொன்னார். எனது மனைவி ஆர்மியில் கர்னலாக இருக்கிறார். அவர் இன்னும் படம் பார்க்கவில்லை. தொழில் வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளார்” என்றார்.