அயோத்தி ராமர் கோயில் பிரான் பிரதிஷ்டை விழாவை முன்னின்று நடத்திய, தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா லக்ஷ்மிகாந்த் தீட்ஷித் என்பவர் இன்று காலை காலமானார்.
86 வயதாகும் தீட்ஷித் கடந்த சில தினங்களாகவே உடல்நிலை சரியில்லாது இருந்ததாகவும், அதன் காரணமாக அவர் இன்று இறந்திருப்பதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். லக்ஷ்மிகாந்த் தீட்ஷித்தின் இறுதிச் சடங்குகள் மணிகர்னிகா தலத்தில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் ஜனவரி 22 அன்று அயோத்தி கோயிலில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமரை முன்னிறுத்தி குடமுழுக்கு விழா நடைபெற்ற போதும், சடங்கு சம்பிரதாயங்களை லக்ஷ்மிகாந்த் தீட்ஷித் முன்னின்று மேற்கொண்டார்.
வாராணசியின் மூத்த ஆன்மிக அறிஞர்களில் ஒருவராக லக்ஷ்மிகாந்த் தீட்ஷித் அறியப்பட்டவர். இவர் மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால் அவரது குடும்பம் பல தலைமுறைகளாக வாராணசியில் வசித்து வருகிறது.
லக்ஷ்மிகாந்த் தீட்ஷித் மறைவுயொட்டி உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார். 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "காசியின் சிறந்த அறிஞரும், ஸ்ரீராம ஜென்மபூமி பிரான பிரதிஷ்டையின் தலைமை அர்ச்சகருமான ஆச்சார்யா ஸ்ரீ லக்ஷ்மிகாந்த் தீட்சித் அவர்களின் மறைவு ஆன்மிக உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சமஸ்கிருத மொழி மற்றும் இந்திய கலாச்சாரத்திற்கான சேவைக்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார்" என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மேலும் “இந்த துக்கத்தைத் தாங்கும் வலிமையை அவரது சீடர்களுக்கு அளிக்கவும், மறைந்த ஆன்மாவுக்கு தனது காலடியில் இடம் கொடுக்கவும் பகவான் ஸ்ரீராமரைப் பிரார்த்திக்கிறேன்” என்றும் அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.