டெபாசிட் கூட வாங்க முடியவில்லை... அதிமுக தொண்டரின் ஆதங்க வீடியோ வைரல்!

அதிமுக தொண்டர்
அதிமுக தொண்டர்

"தொண்டர்களுக்கு துரோகம் செய்து விட்டீர்கள். பல இடங்களில் டெபாசிட் கூட அதிமுகவால் வாங்க முடியவில்லை" என்று ஆதங்கத்துடன் அதிமுக தொண்டர் பேசி வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிப் பெற்றுள்ளது. அதிமுக, பாஜக என தனித்தனியாக போட்டியிட்ட அணிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன. முக்கியமாக தமிழகத்தை பலமுறை ஆண்ட அதிமுக, ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறாமல், பல தொகுதிகளில் இரண்டாம் இடத்திற்கும், மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளன. கோவை உட்பட பல தொகுதிகளில் அதிமுகவை முந்தி பாஜக இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தல், மக்களவைத் தேர்தல் என தொடர்ந்து தோல்வியை அதிமுக சந்தித்து வருவதால், தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் தோல்விக்கு, ஈபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் என பல்வேறு அணிகளாக அதிமுக பிரிந்ததே காரணம் என்றும், எல்லோரும் இணைந்து அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றும் தொண்டர்களிடையே கோரிக்கை குரல் எழுந்துள்ளது. இந்நிலையில் அதிமுக தொண்டர் ஒருவர், கட்சி படுதோல்வியை சந்தித்ததை சகித்துக் கொள்ள முடியாமல், அதிமுக தலைவர்கள் குறித்தும், கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பது குறித்தும் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் இருப்பவர், மதுரை கீரைத் துறை பகுதியைச் சேர்ந்த அதிமுக தொண்டரான மார்க்கெட் முத்துராமலிங்கம் என்று தெரிய வந்துள்ளது. அந்த வீடியோவில், "தொண்டர்களுக்கு துரோகம் செய்து விட்டீர்கள். டெபாசிட் கூட சில இடங்களில் இழந்து விட்டோம்" என்று முன்னாள் அமைச்சர்கள் கே.பி முனுசாமி மற்றும் ஜெயக்குமார் குறித்து கடுமையாக தாக்கி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in