
தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 2.69 கோடி பேருக்கு இன்று குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்களில் தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த இரண்டு மாதங்களிலும் நாடு முழுவதும் 19 வயதுக்குட்பட்ட சிறார் மற்றும் 30 வயதுக்குட்பட்ட வளரிளம் பெண்களுக்கு 'அல்பெண்டசோல்' எனப்படும் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் அதுபோல தகுதியான அனைவருக்கும் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 17-ம் தேதி (இன்று) தமிழகம் முழுவதும் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்கள் மூலமாக 19 வயது வரை உள்ள குழந்தைகள், சிறார்கள் மற்றும் 20முதல் 30 வயது வரை உள்ள பெண்கள் என மொத்தம் 2.69 கோடி பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியில் 1.30 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இன்று விடுபட்டவர்களுக்கு மாத்திரை வழங்க ஆக.24-ம் தேதி மீண்டும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. குடற்புழு நீக்க மாத்திரைகள் உட்கொள்ளாத பட்சத்தில் ஊட்டச்சத்து குறைபாடு, பசியின்மை, ரத்த சோகை, வயிற்று உபாதைகள், சோர்வு நிலை உள்ளிட்ட பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படும் என மருத்துவத் துறையினர் தெரிவிக்கின்றனர்.