ஹாத்ரஸ் சம்பவத்தில் பலி எண்ணிக்கை 134 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மருத்துவமனையில் பிணங்கள் குவிவதைக் கண்ட போலீஸ்காரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் ஹாத்ரஸ் மாவட்டத்தின் சிக்கந்தராராவ் தாலுகாவின் முகல்கடி கிராமத்தில் நேற்று ஆன்மிகக் கூட்டம் நடைபெற்றது. இதை சாக்கார் நாராயண் சாகர் விஷ்வ ஹரி என்பவர் நடத்தினார். இந்த நிகழ்ச்ச்சியில் மக்கள் அமர்வதற்காக மிகப்பெரிய அளவில் பந்தல்போடப்பட்டிருந்தது.
இக்கூட்டத்தில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் நடைபெற்ற இடத்தில் போதுமான காற்றோட்டம் இல்லை என்று கூறப்படுகிறது. தவிர, அதிக அளவில் அனல் காற்றும் வீசியுள்ளது. இதனால் கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த போது, சிக்கார் நராயண் சாகர் விஷ்வ ஹரி கிளம்பிச் சென்றார். அப்போது அவரது காலடி மண்ணை எடுக்க பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு குனிந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்ட நெருக்கடியில் பொதுமக்கள் பலர் கீழே விழுந்ந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 134 பேர் உயிரிழந்துள்ளனர். அதோடு பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பக்தர்களின் சடலங்களை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லும் குழுவில் காவலர் ரவி யாதவ் என்பவர் பணியமர்த்தப்பட்டிருந்தார்.
எட்டா மருத்துவக் கல்லூரியில் பணியிலிருந்த ரவி யாதவ், சடலங்கள் குவிவதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், திடீரென மயங்கி கீழே விழுந்ததாகவும் உடனிருந்த காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ரவி யாதவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், அவர் மாரடைப்பால் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளனர். அலிகார் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி யாதவிற்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தையும் இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.