குட் நியூஸ்... புற்றுநோயை குணப்படுத்த மாத்திரை போதும்... டாடா இன்ஸ்டிட்யூட் சாதனை!

மும்பை டாடா புற்றுநோய் மருத்துவமனை
மும்பை டாடா புற்றுநோய் மருத்துவமனை

மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் இரண்டாவது முறையாக புற்றுநோய் மீண்டும் வருவதைத் தடுக்கும் வகையிலான ஒரு மாத்திரையை கண்டுபிடித்து அசத்தியுள்ளது.

டாடா இன்ஸ்டிட்யூட்  நிறுவனம் இது குறித்த ஆராய்ச்சியை கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வந்த நிலையில், மீண்டும் புற்று நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்ட மாத்திரையை  தற்போது கண்டுபிடித்துள்ளது. இது நோயாளிகளுக்கு இரண்டாவது முறையாக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும் என்றும், அத்துடன் கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி போன்ற சிகிச்சையின் பக்க விளைவுகளை 50 சதவீதம் குறைக்கும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சி குழுவில் இடம் பெற்றுள்ள டாடா மெமோரியல் மருத்துவமனையின் மூத்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேந்திர பத்வே "எலிகளில் மனித புற்றுநோய் செல்கள் புகுத்தப்பட்டு, புற்றுநோய் கட்டி உருவாக்கப்பட்டது. கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபி மற்றும் அறுவை சிகிச்சை மூலம் சிகிச்சையளிக்கப்பட்டது. இந்த புற்றுநோய் செல்கள் இறக்கும் போது, அவை குரோமாடின் துகள்கள் எனப்படும் சிறிய துண்டுகளாக உடைந்து, இரத்த ஓட்டத்தின் மூலம் உடலின் மற்ற பகுதிகளுக்குச் சென்று ஆரோக்கியமான செல்களுக்குள் செல்ல முடியும்.

குரோமாடின் துகள்கள் ஆரோக்கியமான குரோமோசோம்களுடன் இணைந்து புதிய கட்டிகளை ஏற்படுத்தலாம். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண எங்கள் மருத்துவர்கள் தீவிரமாக உழைத்து ரெஸ்வெராட்ரோல் மற்றும் காப்பர் (R+Cu) கொண்ட புரோ-ஆக்ஸிடன்ட் மாத்திரைகளை கண்டறிந்துள்ளனர்" என்றார். 

இந்த R+Cu மாத்திரை குரோமாடின் துகள்களை அழிக்கிறது. R+Cu மாத்திரையை வாய்வழியாக எடுத்துக் கொள்ளும்போது, வயிற்றில் ஆக்ஸிஜன் ரேடிக்கல்களை உருவாக்குகிறது. மேலும் அவை விரைவாக உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் நுழைகின்றது. ஆக்ஸிஜன் ரேடிக்கல்கள் உடலின் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு புற்றுநோய் செல்களை நகர்த்துவதைத் தடுக்கின்றது. 

மேலும் இது கீமோதெரபி நச்சுத்தன்மையைத் தடுக்கிறது. இந்த மாத்திரை புற்றுநோய் சிகிச்சையின் பக்க விளைவுகளை சுமார் 50 சதவிகிதம் குறைக்கும் அதே சமயத்தில் இரண்டாவது முறை புற்றுநோயைத் தடுப்பதில் 30 சதவிகிதம் பயனுள்ளதாகவும் இருக்கும். கணையம், நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் ஆகியவற்றிலும் இது பயனுள்ளதாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த மாத்திரை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் (FSSAI) ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 

ஒப்புதல் கிடைத்த பிறகு, வரும் ஜூன் - ஜூலை மாதங்களில் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்த இந்த மாத்திரை பெரிதும் உதவும். இந்த மாத்திரை எல்லா மருந்தகங்களிலும் கிடைக்கும். இது மிகப்பெரிய வெற்றி என டாடா இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in