
மறுபடியும் ஆரம்பத்தில் இருந்தா என்று அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்தோனேசியாவில் பயங்கர சக்தி வாய்ந்த புதிய வகை கொரோனா வைரஸ் மாறுபாடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை கொரோனா வைரஸ் மாறுபாடு மிகவும் இணை நோய் உள்ளவர்களுக்கு ஆபத்தானது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அவரச நிலையை பிரகடனம் செய்யும் அளவிற்கு பெரும் தாக்கத்தையும் இழப்புகளையும் ஏற்படுத்தியது. மனித வாழ்க்கையை புரட்டிப் போட்ட அந்த நிகழ்வில் இருந்து இன்னும் மக்கள் வெளிவராத நிலையில், கொரோனா வைரஸ் மாறுபாடு அவ்வப்போது நாட்டை அச்சுறுத்த செய்கிறது. குறிப்பாக சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கம் இன்னும் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் பல திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளது.
அந்த நோயாளியிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை சோதித்தபோது, அந்த வைரஸ் சுமார் 113 தனிப்பட்ட மாற்றங்களை கொண்டிருந்ததாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதில் சுமார் 37 வகை மாறுதல்கள், மனிதனின் உடலில் உள்ள செல்களின் புரத சத்தை அழிக்கவல்லது என்று கூறப்படுகிறது. இதற்கு முன்பு நம்மை பயமுறுத்திய ஓமிக்கிரான் வகை கோவிட் வைரஸ் வெறும் 50 வகை தனிப்பட்ட மாற்றங்களை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுவரை கண்டறியப்பட்ட மிகவும் தனித்துவனமான வைரஸ் தொற்றாக இது இருக்கின்றது என்றும், ஆனால் அது அதிக ஆதிக்கம் செலுத்தும் என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது பரவினாலும், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது என உயர்மட்ட வல்லுநர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில் இத்தகைய நோய்த்தொற்றுகள், எய்ட்ஸ் அல்லது புற்றுநோய் கீமோதெரபிக்கு உட்பட்டவர்கள் போன்ற குறைந்த நோயெதிர்ப்பு உடல் அமைப்புகளைக் கொண்ட நபர்களை அடிக்கடி பாதிக்கின்றன, இதனால் அவர்களால் அந்த வைரஸை திறம்பட எதிர்த்துப் போராட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நீண்டகால நோய்த்தொற்றுகள், விஞ்ஞானிகளுக்கு கவலையை ஏற்படுத்துகின்றன. ஏனெனில் அவை வைரஸ் மாற்றங்களை ஊக்குவிக்கும் நிலைமைகளை உருவாக்குகின்றன என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.