சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரே விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 113 பேர்!

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரே விமானத்தில் தங்கம் கடத்தி வந்த 113 பேர்!

ஓமன் நாட்டிலிருந்து சென்னை வந்த பயணிகள் விமானத்தில், கடத்திவரப்பட்ட 13 கிலோ தங்கம் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மஸ்கட்டில் இருந்து, சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஓமன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பெருமளவு தங்கம், ஐபோன்கள், லேப்டாப்புகள், வெளிநாட்டு சிகரெட்களை நூற்றுக்கு மேற்பட்ட பயணிகள் கடத்தி வருவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதை அடுத்து விமானத்தில் வந்த 186 பயணிகளையும் நிறுத்தி, பல மணி நேரம் விசாரணை நடத்தினர். அதில் 73 பேர், கடத்தல் விவகாரங்களில் தலையிடாத, பயணிகள் என்று தெரிய வந்தது. மீதமிருந்த 113 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தினர்.

அதில் பயணிகள் தங்களுடைய உள்ளாடைகளுக்குள் தங்க கட்டிகள், தங்கப் பசைகள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தனர். அதோடு சூட்கேஸ் மற்றும் பைகளில் ரகசிய அறைகள் வைத்து 120 ஐபோன்கள், 84 ஆண்ட்ராய்டு போன்கள், வெளிநாட்டு சிகரெட்கள், லேப்டாப்புகளை மறைத்து வைத்திருந்தனர்.

தங்கம் மட்டும் மொத்தம் 13 கிலோ இருந்தது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 14 கோடி ரூபாய் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து பயணிகள் 113 பேர் மீதும், சுங்க சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்து ஜாமீனில் விடுவித்தனர்.

113 பேரும் சாதாரண கடத்தல் குருவிகள். இவர்களை இயக்கும் கடத்தல் கும்பலின் தலைவர்கள் யார் என்று மத்திய வருவாய் புலனாய்வு துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in