
ரயிலில் ஓடி வந்து ஏறிய கல்லூரி மாணவர், ரயிலுக்குள் ஏற முடியாமல் தவறி கீழே விழுந்து, பிளாட்பாரத்திற்கும் ரயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டார். இதில், பொறியியல் கல்லூரி மாணவரின் கால்கள் துண்டானது.
மதுராந்தகம் வன்னியர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மூர்த்தி. இவருடைய மகன் நேதாஜி(19). இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். தினசரி மதுராந்தகத்தில் இருந்து தாம்பரத்தில் உள்ள கல்லூரிக்கு ரெயிலில் சென்று வருவார் நேதாஜி.
இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு செல்ல மதுராந்தகம் ரயில் நிலையத்திற்கு சென்றார் நேதாஜி. அப்போது சென்னை நோக்கி செல்லும் விழுப்புரம் பயணிகள் ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்தது. ரயில் புறப்பட்ட நிலையில், மாணவர் நேதாஜி ஓடிச்சென்று ரயில் பெட்டியில் ஏற முயற்சித்ததாக தெரிகிறது. அப்போது ரயிலில் ஏற முடியாமல் கால் தவறி கீழே விழுந்துள்ளார். இதில் தண்டவாளத்திற்கும் ரயில் பெட்டிக்கும் இடையே நேதாஜி சிக்கிக்கொண்டார்.
இதில் அவரது கால்களில் ரெயில் பெட்டியின் சக்கரங்கள் அடுத்தடுத்து ஏறி இறங்கின. நேதாஜியின் இரண்டு கால்களும் முழுவதுமாக நசுங்கி துண்டானது. இதனைக் கண்டு ரயில் நிலையத்தில் இருந்தவர்களும், ரயிலில் இருந்த பயணிகளும் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதனையடுத்து உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மாணவர் நேதாஜியை மீட்டு சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து செங்கல்பட்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.