
புதிய தொழில் தொடக்கம் மற்றும் ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கம் தொடர்பான அமைச்சரவை கூட்டம் இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தொழில்துறை சார்பில் ஜனவரி 7 மற்றும் 8-ம் தேதிகளில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை வெற்றிகரமாக முடித்து, தமிழகத்திற்கு அதிக முதலீடுகளை கொண்டு வர தொழில்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் பல புதிய தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே உள்ள தொழில்களுக்கான விரிவாக்கத்திற்கு அனுமதி கேட்டும் தமிழ்நாடு அரசுக்கு பல விண்ணப்பங்கள் வந்துள்ளன. இந்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், இன்று மாலை 6.30 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவதற்கு முன்பு சில தொழில்களுக்கான அனுமதியை அமைச்சரவை வழங்க வேண்டியதுள்ளது. இந்த கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.