
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் ஒருவர் அமேசான் நிறுவனத்திற்கு ஆப் தயாரித்து கொடுத்து மாதம் 2 லட்ச ரூபாய் வரை வருமானம் பெறுகிறார்.
இந்த காலத்து இளைஞர்கள் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களில் ரொம்பவே ஸ்மார்ட். அவர்கள் பிறந்த போதே தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்த காலம் என்பதால், எளிதில் அவற்றை கற்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த நல்லபெருமாள் - முத்துலட்சுமி தம்பதியின் மகன் சைலேஷ் தனது அறிவாற்றலால் உலகின் பிரபல நிறுவனமான அமேசான் உடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
இவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் வசித்து வருகின்றனர். பெற்றோர் இஸ்திரி தொழில் நடத்தி வரும் நிலையில், குடும்ப சூழல் அறிந்த மகன் சைலேஷ் தொழில்நுட்பத்தில் தனது அறிவை வளர்த்துக் கொண்டார்.
இவருக்கு மொபைல் போன்கள் மீது ஆர்வம் இருந்ததால், செயலிகள் குறித்து நன்கு தெரிந்து கொண்டு, தொழில்நுட்பங்களை படித்து சொந்தமாக 3 செயலிகளை உருவாக்கியுள்ளார்.
இவர் விளையாட்டு தொடர்பான இரண்டு செயலிகளை விற்பனை செய்துள்ளார். விவரம் அறிந்த அமேசான் நிறுவனம் சைலேஷ் உடன் ஒப்பந்தம் செய்துள்ளது. அதன் அடிப்படையில் சைலேஷ் அமேசான் நிறுவனத்திற்கு செயலியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
கேம் விளையாட செல்போன்களைப் பயன்படுத்தத் தொடங்கிய சைலேஷ் தொழில்நுட்பம் மீதிருந்த ஆர்வத்தினால் தற்போது அதில் நிபுணத்துவம் பெற்றவராக மாறியுள்ளார்.
மேலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற வேட்கை மாணவர் சைலேஷை நல்ல நிலைக்கு உயர்த்தியுள்ளது. அதுமட்டும் இல்லாமல், முறையான வழிகாட்டுதல் காரணமாக செயலியை உருவாக்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறும் சைலேஷ், தனது கணினி ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.