இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையில் இதுவரை 98 இந்தியர்கள் பலி... வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்

ஹஜ் பயணம்
ஹஜ் பயணம்

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின்போது இதுவரை 98 இந்தியர்கள் உயிரிழந்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு ஹஜ் யாத்திரைக்கு சென்ற இந்தியர்களில் குறைந்தது 98 பேர் பல்வேறு காரணங்களால் அங்கே பலியாகி இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது. இயற்கையான காரணங்கள், முதுமை, நோய், விபத்து உள்ளிட்ட காரணங்கள் இதன் பின்னணியில் இருந்தபோதும், அங்கு நிலவும் கடும் வெப்பம் முக்கியமாக காரணமாக விளங்குகிறது. இந்த கடும் வெப்பம் காரணமாக அங்கே அதிகரித்துவரும் சர்வதேச யாத்ரீகர்களின் உயிர்ப்பலிகளுக்கு மத்தியில், இந்தியர்களின் நிலவரத்தை வெளியுறவுத்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.

ஹஜ் யாத்ரீகர்கள்
ஹஜ் யாத்ரீகர்கள்

“இந்த ஆண்டு இதுவரை 1,75,000 இந்தியர்கள் ஏற்கனவே ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களில் 98 இந்தியர்களை இழந்துள்ளோம். பல்வேறு இயற்கை காரணிகளோடு விபத்து உள்ளிட்டவையும் இந்த உயிர்ப்பலிகளுக்கு காரணமாகி உள்ளன. நான்கு இந்தியர்கள் விபத்துக்களால் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு ஹஜ்ஜில் இறந்த இந்தியர்களின் எண்ணிக்கை 187 ஆகும்" என்று வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய, மதம் சார்ந்த புனிதப் பயணம் மேற்கொள்ளும் இடங்களில் ஒன்றான ஹஜ், இஸ்லாமின் 5 கடமைகளில் ஒன்றாகும். மேலும் அனைத்து முஸ்லிம்களும் ஒரு முறையாவது அதை நிறைவேற்ற வேண்டும். இந்த ஆண்டு சுமார் 1.8 மில்லியன் முஸ்லிம்கள் பங்கேற்கும் வருடாந்திர யாத்திரையின் போது வெப்பநிலை கடுமையாக இருப்பதால் அது வயது முதிர்ந்தோருக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.

கடும் கோடை வெப்பம்
கடும் கோடை வெப்பம்

10 நாடுகளை சேர்ந்த புனித யாத்ரீகர்களில் 1,081 இறப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன. மொத்த எண்ணிக்கையில் 658 எகிப்தியர்கள், 183 இந்தோனேசியர்கள், 68 ஜோர்டானியர்கள் மற்றும் 58 பாகிஸ்தானியர்கள் இந்த எண்ணிக்கையில் அடங்குவார்கள். இவர்களில் கடுமையான வெப்பம் காரணமாக பலியானவர்களே அதிகம். கடும் வெப்பம் உருவாக்கிய உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக இந்தளவுக்கு அதிக இறப்புகள் நேரிட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in