சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்… 3 பேர் அதிரடி கைது!

சென்னை விமான நிலையத்தில் 8 கிலோ தங்கம் பறிமுதல்… 3 பேர் அதிரடி கைது!

சென்னை விமான நிலையத்தில் நான்கரை கோடி ரூபாய் மதிப்பிலான 8 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அபுதாபியில் இருந்து சென்னைக்கு வந்த ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானப் பயணிகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சென்னையைச் சேர்ந்த 32 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவர், குவைத் நாட்டிற்கு சுற்றுலா சென்றுவிட்டு, சென்னை வந்தார். அவரை முழுமையாக பரிசோதித்த போது, எதுவும் கிடைக்கவில்லை. அவர் குவைத்தில் இருந்து, 3 எல்.இ.டி எமர்ஜென்சி லைட்டுகள் வாங்கி வந்திருந்தார். அந்த லைட்டுகள் வழக்கத்தை விட எடை அதிகமாக இருந்தன.

இதையடுத்து லைட்டுகளை கழற்றிப் பார்த்த போது, அதனுள் தங்கக் கட்டிகள், தகடுகள், சிறிய துண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் இருந்து 4.9 கிலோ தங்க கட்டிகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ரூ. 2.67 கோடி. இதையடுத்து அந்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

அதே போல், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் மலேசிய நாட்டைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவர் சுற்றுலா பயணியாக  சென்னைக்கு வந்திருந்தார்.

அவர் மீதும் சுங்க அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, உடைமைகளை சோதனை செய்தனர். அதனுள் தரையில் துளையிடும், டிரில்லிங் மெஷின் ஒன்று இருந்தது. சுங்க அதிகாரிகள் அந்த டிரில்லிங் மிஷினை கழற்றி பார்த்து சோதித்தனர்.

அதனுள் 3 தங்க உருளை கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அதன் எடை 3.5 கிலோ. அதன் சர்வதேச மதிப்பு 1.9 கோடி. இதை அடுத்து சுங்க அதிகாரிகள் தங்க உருளைகளை பறிமுதல் செய்து, மலேசிய நாட்டைச் சேர்ந்த கடத்தல் பயணியை கைது செய்தனர்.

இருவரிடம் விசாரணை நடத்திய போது, சென்னையைச் சேர்ந்த பிரபல கடத்தல் ஆசாமி ஒருவர் கடத்தல் தங்கத்தை வாங்க விமான நிலைய வளாகத்திற்குள் வந்து காத்திருப்பதாக கூறினார்கள். இதை அடுத்து சுங்க அதிகாரிகள் விரைந்து சென்று, தங்கத்தை வாங்க வந்திருந்த கடத்தல் ஆசாமியை கைது செய்தனர். இதையடுத்து 3  பேரிடமும் சுங்க அதிகாரிகள் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in