ஊழியர்கள் உடந்தை... சென்னை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்!

ஊழியர்கள் உடந்தை... சென்னை விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்!

துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.70 கோடி மதிப்புடைய, 4.7 கிலோ தங்க கட்டிகளை, சென்னை விமான நிலையத்தில், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து, தங்க கட்டிகள், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலரின் உதவியுடன் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள், சாதாரண உடையில், பயணிகள் போல், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது ஹவுஸ் கீப்பிங் பணியில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் சீனிவாசன் (32), என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது.

அவர் பணி முடிந்து, வீட்டிற்கு செல்வதற்காக வெளியில் வந்த போது, அவரை நிறுத்தி சோதனை இட்டனர். அவருடைய உள்ளாடைக்குள் சுமார் ஒரு கிலோ தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

பின்னர் குரோம்பேட்டையில் உள்ள சீனிவாசனின் வீட்டிற்கு சென்று, சோதனை இட்டனர். அங்கிருந்து 3.7 கிலோ தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைப்பற்றினர். விசாரணையில் ஏற்கெனவே ஹவுஸ்கீப்பிங் பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றிய தினகரன் (50), என்பவரும் இந்த தங்க கடத்தலில் முக்கிய ஆசாமி என்று தெரிய வந்தது.

அவர் கொடுத்த தகவலின் பேரில், வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் கடத்தல் ஆசாமிகள், சீனிவாசனுக்கு அறிமுகம் ஆனார்கள் என்று தெரிய வந்தது. இதை அடுத்து அதே குரோம்பேட்டையில் வசித்து  வந்த, தினகரனையும், மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

இருவரிடம் இருந்து மொத்தம் ரூபாய் 2.70 கோடி மதிப்புடைய 4.7 கிலோ, தங்க கட்டிகளை மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள், பறிமுதல் செய்தனர். தங்க கட்டிகள் அனைத்தும், துபாயிலிருந்து சென்னைக்கு வந்த விமானங்களில் கடத்தி வரப்பட்ட   கடத்தல் தங்கங்கள் என்று தெரியவந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in