துப்பாக்கி உரிமம் கோரும் 42,000 பெண்கள்... இஸ்ரேலின் அதிர்ச்சிகர மாற்றம்

துப்பாக்கி உரிமம்
துப்பாக்கி உரிமம்

ஹமாஸ் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை அடுத்து, துப்பாக்கி உரிமம் கோரும் பெண்கள் மற்றும் ஆயுதங்கள் கையாள்வதில் பயிற்சி பெறும் பெண்கள் இஸ்ரேல் தேசத்தில் அதிகரித்துள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து பல இஸ்ரேலியர்கள் பாதுகாப்பின்மை உணர்வால் பிடிபட்டுள்ளனர். அவர்கள் மத்தியில் துப்பாக்கி அனுமதிக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை இஸ்ரேலில் கணிசமாக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பல்வேறு குழுக்கள் இதனை விமர்சித்தும் வருகின்றன.

துப்பாக்கி - தோட்டாக்கள்
துப்பாக்கி - தோட்டாக்கள்

பாதுகாப்பு அமைச்சகத்தின் தரவுகளின்படி, ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி அனுமதி கோரி 42,000 விண்ணப்பங்கள் பெண்களிடமிருந்து மட்டும் வந்துள்ளன. இவற்றைப் பரிசீலித்து 18,000 பேருக்கு இஸ்ரேல் அனுமதியும் வழங்கி விட்டது.

இது காசா போருக்கு முந்தைய, துப்பாக்கி உரிமம் வைத்திருந்த பெண்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும். இஸ்ரேலின் வலதுசாரி அரசாங்கம் மற்றும் அதன் தீவிர வலதுசாரி பாதுகாப்பு மந்திரி இடாமர் பென் கீழாக துப்பாக்கி உரிமம் பெறுவதற்கான சட்டங்கள் தளர்த்தப்பட்டதன் மூலம் இந்த எழுச்சி நிகழ்ந்துள்ளது.

15,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பெண்கள் இப்போது இஸ்ரேல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் துப்பாக்கி வைத்துள்ளனர்; மேலும் 10,000 பெண்கள் கட்டாய பயிற்சியிலும் சேர்ந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெண்கள் துப்பாக்கி உரிமம் கோருவதற்கு பரவலாக வரவேற்பு தென்பட்ட போதும், எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் மத்தியில் ஆயுதங்கள் அதிகம் புழங்குவது சமூகத்தில் இணக்கத்தை குறைக்கும் என்றும், குடிமக்களுக்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமையாக மட்டுமே இருக்க வேண்டும் எனவும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

துப்பாக்கி பெண்
துப்பாக்கி பெண்

போரைத் தூண்டிய அக்டோபர் 7 தாக்குதலில் இஸ்ரேலில் 1,194 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள். பின்னர் இஸ்ரேலின் பழிவாங்கும் தாக்குதலில் காசாவில் குறைந்தது 37,431 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் சொற்ப எண்ணிக்கையில் மட்டுமே ஹமாஸ் பயங்கரவாதிகள் அடங்குவார்கள். ஏனையவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள். அதிலும் சுமார் 40 சதவீதத்தினர் சிறார் மற்றும் பெண்களாவர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in