ஜி20 மாநாடு... இந்தியா வருகிறார் ஜோ பைடன்… நட்சத்திர ஹோட்டல்களில் 400 அறைகள் முன்பதிவு!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஜி20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இந்தியா வர இருப்பதால் டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஜி20 மாநாடு டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செப்டம்பர் 7ம் தேதி இந்தியா வருகிறார். அவர் நான்கு நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

ஜி20 உச்சி மாநாட்டில் 29 நாடுகளின் தலைவர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர் அதிகாரிகள், 14 சர்வதேச அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக டெல்லியின் புகழ் பெற்ற நட்சத்திர விடுதிகளான ஐடிசி மவுரியா, தாஜ் பேலஸ், தி ஓபராய், தி லோதி, தி இம்பீரியல், லீ மெரிடியன் ஆகியவை முன்பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிபர் பைடன் மற்றும் அவரது குழுவினரை தங்க வைக்க ஐடிசி மௌரியாவில் 400 அறைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்கு முன்பாக இந்தியா வந்திருந்த அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஜார்ஜ் டபிள்யூ. புஷ், பில் கிளிண்டன், பராக் ஒபாமா ஆகியோர்கள் இங்கு தான் தங்கினர்.

பைடன் வருகையை ஒட்டி ஐடிசி ஹோட்டல் வளாகத்தை அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதே போல், சீன அதிபர் ஜி ஜின்பிங் டெல்லி தாஜ் ஹோட்டலில் தங்க வைக்கப்பட உள்ளார். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் ஜெர்மனியைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ஹோட்டல் ஷாங்க்ரி-லா தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஜி20 உச்சி மாநாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறுவது, காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, உக்ரைனில் ரஷ்ய போரினை தடுப்பது, வறுமையை எதிர்த்துப் போராடுவது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. உலக தலைவர்கள் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள டெல்லி வரவிருக்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in