
மறைந்த முன்னாள் அமைச்சர் செங்குட்டுவனின் மகன்கள், மகள் உள்ளிட்ட 4 பேருக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டம் வேலக்குறிச்சியைச் சேர்ந்த திமுக முன்னாள் அமைச்சர் செங்குட்டுவன், முன்னாள் முதல்வர் கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராக பதவி வகித்தார்.
1996 - 2001 காலகட்டத்தில் அமைச்சராக இருந்த இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே 2013-ம் ஆண்டு இவர் அதிமுகவில் இணைந்தார். பின்னர் 2021-ம் ஆண்டு மீண்டும் திமுகவில் சேர்ந்தார்.
இந்நிலையில் 2021-ம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செங்குட்டுவன் அதில் இருந்து மீண்ட பிறகு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். சொத்துக்குவிப்பு வழக்கு திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது. அதில், செங்குட்டுவனின் மகன்கள் பன்னீர்செல்வம், சக்திவேல் மற்றும் மகள் மீனாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், இந்த வழக்கில் செங்குட்டுவனின் சகோதரர் மகள் வள்ளிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.