
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே ஹோட்டலில் சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்று சாப்பிட்ட 26 பேருக்கு வாந்தி வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை அடுத்து அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல்லில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், அவரது உறவினர்கள், மருத்துவ மாணவர்கள் உட்பட 15 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இதே போன்ற மற்றுமொரு சம்பவம் கிருஷ்ணகிரியில் நடைபெற்றுள்ளதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் டெல்டா என்கிற தனியார் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் 2000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். நேற்று இந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வட மாநில தொழிலாளர்கள் சுமார் 200 பேர், கிருஷ்ணகிரியில் உள்ள சக்தி ஃபாஸ்ட் ஃபுட் என்கின்ற கடையிலிருந்து சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்று, வீட்டில் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்தில் திடீரென்று 26 பேருக்கும் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக இவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனர்.
இதில் 26 வட மாநில இளைஞர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிக்கன் ரைஸ் சாப்பிட்டு 26 நபர்களுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையிலும் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.