மரண பயத்தில் 490 குடும்பங்கள்... நொறுங்கும் நிலையில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம்!

மரண பயத்தில் 490 குடும்பங்கள்... நொறுங்கும் நிலையில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம்!

சென்னை சாலிகிராமத்தில் இடிந்து விழும் அபாயத்தில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் இருக்கிறது. இந்த வீட்டை வாங்கியவர்கள் தினந்தோறும் மரண பயத்தில் வசித்து வருகின்றனர்.

சென்னை சாலிகிராமத்தில் 4.65 ஏக்கர் நிலத்தில் ஜெயின் வெஸ்ட் மினிஸ்டர் என்ற பெயரில் 17 மாடி குடியிருப்பு கட்டிடம் கட்டுவதற்கு 2011ம் ஆண்டு சி.எம்.டி.ஏ.விடம் ஒப்புதல் பெறப்பட்டது. கட்டுமான பணிகள் முடிந்து 2015ம் ஆண்டு பணி நிறைவு சான்றிதழை சி.எம்.டி.ஏ. வழங்கியது. இங்கு கட்டப்பட்ட 630 வீடுகளில் 490 வீடுகளை வாங்கிய மக்கள் 2015ம் ஆண்டுக்கு பின்னர் படிப்படியாக குடியேறினர். இந்த வளாகத்தில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகள் வணிக பயன்பாட்டுக்கு மாற்றப்பட்டதாக 2016ல் புகார் எழுந்தது.

இதன் அடிப்படையில் இங்குள்ள 'டி' பிளாக் பகுதிக்கு 2016ம் ஆண்டு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சீல் வைத்தனர். கட்டுமான நிறுவனம் உறுதி அளித்ததன் அடிப்படையில் ஆறு மாத காலம் அவகாசம் அளித்து சீல் அகற்றப்பட்டது. ஆனால், கட்டுமான நிறுவனம் உறுதி அளித்தபடி செயல்படாததால் அந்த வளாகம் 2019ம் ஆண்டு மீண்டும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வளாகத்தில் பெரும்பாலான வீடுகளின் சுவர்கள், துாண்கள், பீம்களில் மேற்கூரையில் விரிசல்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுவதாக புகார் எழுந்தது.

இது குறித்து அங்குள்ள வீட்டு உரிமையாளர்கள் நல சங்க நிர்வாகிகள் கூறுகையில், "தரமில்லாத கட்டுமானத்தால் இந்த கட்டடத்தில் பெரும்பாலான பாகங்கள் உடைந்து விழுகின்றன. இதில் கட்டுமான நிறுவனம் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த நிறுவனம் இது போன்ற கட்டடங்களை வேறு இடங்களில் கட்டுவதையும் தடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளனர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், "சாலிகிராமம் அடுக்குமாடி குடியிருப்பில் விரிசல்கள் ஏற்பட்டது தொடர்பாக கட்டடத்தின் நிலைமை மோசமடைந்ததால் அது குறித்து மாநகராட்சி சி.எம்.டி.ஏ. அதிகாரிகள் ஆய்வு செய்து இருக்கிறோம். பிரச்சினையை சரி செய்வது குறித்து வீட்டு உரிமையாளர்களுடன் பேசி வருகிறோம்" என்றனர். இதனிடையே, சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர், கட்டடத்தின் உறுதி தன்மை குறித்து சான்றிதழ் அளித்த கட்டட அமைப்பியல் பொறியாளர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in