சிக்கிம் வெள்ள பாதிப்பு
சிக்கிம் வெள்ள பாதிப்பு

காட்டாற்று வெள்ளம்... கதறும் மக்கள்... மிதக்கும் சிக்கிம்; 14 பேர் பலி... 154 பேரைக் காணவில்லை!

சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கி இதுவரையில் 154 பேர் மாயமாகி இருப்பதாகவும், அவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் மாநிலத்தில் உள்ள லோனெக் ஏரியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதன் காரணமாக ஏரியின் கரைகள் சேதமாகி தீஸ்டா ஆற்றில் தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது. வெள்ளம் காரணமாக தீஸ்தா நதியின் பாதையில் இருந்த ஏராளமான கிராமங்கள் மற்றும் நகரங்கள் கடும் சேதத்திற்கு ஆளாகியுள்ளது. தீஸ்தான் நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையின் சுரங்கங்களில் தண்ணீரை வெளியேற்றுவதற்காக சென்ற பணியாளர்கள் 12 முதல் 14 பேர் வரை சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு, 24 ராணுவ வீரர்கள் மாயமான நிலையில், ஒருவர் மட்டுமே இதுவரை மீட்க்கப்பட்டுள்ளார். மீதமுள்ள 23 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சிக்கிம் வெள்ள பாதிப்பு
சிக்கிம் வெள்ள பாதிப்பு

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் நெடுஞ்சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் மண்ணில் புதைந்ததே, ராணுவ வீரர்கள் மாயமானதற்கு காரணம் என கூறப்படுகிறது. மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கி இருக்கலாம் என்கிற அச்சமும் நிலவி வருகிறது.

மங்க்யன், கேங்க்டாக், பக்யாங்க், மாவட்டங்களில் பாதிப்பு அதிக அளவில் இருக்கும் நிலையில், ஏராளமானோர் காயமடைந்து இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே நிலைமையை கட்டுப்படுத்த மாநில அரசு சார்பில் மத்திய அரசிடம் இருந்து கூடுதலாக மூன்று தேசிய பேரிடர் மீட்பு படையின் படையணிகளை அனுப்புமாறு சிக்கிம் அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது ஒரு படை அணி மட்டுமே சிக்கிம் மாநிலத்தில் உள்ள நிலையில் கூடுதலாக மூன்று படையணிகள் வந்தால் மட்டுமே நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும் என மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

சிக்கிம் வெள்ள பாதிப்பு
சிக்கிம் வெள்ள பாதிப்பு

இதையடுத்து மத்திய அரசு சார்பில் உடனடியாக விமானம் மூலமாக தேசிய பேரிடர் மீட்பு படை படையணி ஒன்றை அனுப்பி வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடைய, மாநிலத்தில் உணவு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அரசு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். சிலிகுரி, பெய்லி பகுதிகளில் இந்திய ராணுவம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவை சேதமடைந்த பாலங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்வார்கள் என மாநில அரசு அறிவித்துள்ளது.

சிக்கிம் வெள்ள பாதிப்பு
சிக்கிம் வெள்ள பாதிப்பு

இந்த வெள்ளப் பெருக்கு காரணமாக சுங்க்டாங் நகரில் இருந்த காவல் நிலையம் முற்றிலும் சேதம் அடைந்துள்ளது. மாநிலம் முழுவதும் செல்போன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால் தொலை தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதுவரை சேதம் அதிகமாக உள்ள 18 இடங்களில் நிவாரண முகாம்களை துவக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு, இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in