
சென்னையில் இருந்து மதுரை செல்ல வேண்டிய இரண்டு விமானங்கள் பல மணி நேரம் தாமதமானதால் 131 பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து நேற்று மாலை 4:55 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மதுரைக்கு புறப்பட வேண்டும். விமானத்தில் பயணிக்க 53 பேர் முன்னதாகவே வந்து தயாராக இருந்தனர். ஆனால் இரவு 7 மணி ஆகியும் விமானம் புறப்படவில்லை.
அதே போல், மாலை 6:10 மணிக்கு, சென்னையில் இருந்து மதுரைக்கு மற்றொரு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு செல்ல வேண்டும். அந்த விமானத்தில் செல்ல 78 பயணிகள் இருந்தனர். அந்த விமானமும் தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் மொத்தமாக 2 விமானங்களில் செல்ல வேண்டிய, 131 பயணிகள், சென்னை விமான நிலையத்தில் கடும் அவதி அடைந்தனர். அவர்கள் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவன அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு இரவு 8:30 மணிக்கு, 131 பயணிகளுடன் விமானம் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.
தாமதத்திற்கான காரணம் குறித்து இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை. ஆனால் விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள் இல்லாததால், காலதாமதம் ஆனதாக கூறப்படுகிறது.
இதனிடையே, மாலை 5:55 மணிக்கு, சென்னையில் இருந்து பெங்களூர் செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், டெல்லியில் இருந்து சென்னைக்கு இரவு 11:35 மணிக்கு வரவேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் நேற்று ரத்து செய்யப்பட்டன. இரண்டு விமானங்களில் பயணிக்க, போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.