
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயத்தை இந்திய ரிசர்வ் வங்கி முதன் முதலில் 2005ம் ஆண்டு வெளியிட்டது. அதனை தொடர்ந்து, 10 ரூபாய் நாணயம் புழக்கத்தில் வரத்தொடங்கியது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சிறப்பு 10 ரூபாய் நாணயங்களும் வெளியிடப்பட்டது.
இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலாக ஒரு எண்ணம் உள்ளது. அது தொடர்பாக ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்த போதும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்ற பொய்யான தகவல் பரவிய வண்ணமே உள்ளது. இன்றளவும் பல கிராம பகுதிகளில் உள்ள கடைகளில் 10 ரூபாய் நாணயம் மறுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 10 ரூபாய் நாணயத்தை வாங்கவில்லை என்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் எச்சரித்துள்ளார். 10 ரூபாய் நாணயங்களை யாரேனும் வாங்க மறுத்தாலோ, செல்லாது என்றாலோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது, இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பவர்கள் மீது புகார் அளித்தால், இந்திய தண்டனைச் சட்டம் 124 பிரிவு ஏ-வின் படி குற்றம். எனவே, இந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.