சொத்துவரி செலுத்தவில்லையா?; இனி இதுதான் நடக்கும்: எச்சரிக்கும் சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி
சென்னை மாநகராட்சிசொத்துவரி செலுத்தவில்லையா?; இனி இதுதான் நடக்கும்: எச்சரிக்கும் சென்னை மாநகராட்சி

சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்துவரி உரிமையாளர் கட்டிடங்களின் முகப்புகளில் “கட்டிடத்தின் உரிமையாளர் சொத்துவரியினை நீண்ட நாட்களாக மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்” என அறிவிப்பு பதாகைகள் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியினை நிலுவையின்றி செலுத்தி வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

இதுத்தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘’சென்னை மாநகராட்சியில் இந்த நிதியாண்டில் சொத்துவரி வசூல் இலக்காக 1,500 கோடி நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், 22.03.2023 வரை 1,408.97 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. நிலுவையிலுள்ள சொத்துவரியினை வசூலிக்க வருவாய்துறையால் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சொத்துவரி நிலுவையிலுள்ள சொத்து உரிமையாளர்களுக்கு குறுந்தகவல், குரல் ஒலி அழைப்புகள், கட் செவ்வி தகவல், செய்தித்தாள்களில் விளம்பரங்கள் வெளியிடுதல் ஆகியவற்றின் மூலம் சொத்துவரி செலுத்த விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் சொத்து வரி செலுத்தாத உரிமையாளர்களுக்கு வசதியாக இணையதளம் வாயிலாகவும் பணத்தை செலுத்துவதற்கான பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சொத்துவரி அதிக நிலுவை வைத்துள்ள சொத்துவரி உரிமையாளர் கட்டிடங்களின் முகப்புகளில் “கட்டிடத்தின் உரிமையாளர் சொத்துவரியினை நீண்ட நாட்களாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளார்” என அறிவிப்பு பதாகைகள் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சொத்துவரியினை அனைத்து உரிமையாளர்களும் கட்டாயம் நிலுவையின்றி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில், சொத்துவரி நிலுவை வைத்துள்ள முதன்மையான 100 சொத்து உரிமையாளர்களின் பட்டியல் மற்றும் நீதிமன்ற வழக்கு நிலுவையின் காரணமாக சொத்துவரி செலுத்த தடை பெற்று வசூல் செய்ய இயலாத பட்டியல் ஆகியவை இணைய தளத்திலும் மற்றும் தினசரி செய்தித்தாள்களிலும் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து சொத்து உரிமையாளர்களும் இந்த நிதியாண்டு முடிவடைய இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் சொத்துவரியினை நிலுவையின்றி செலுத்தி பெருநகர சென்னை மாநகர வளர்ச்சி பணிகளுக்கு உறுதுணையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in