'உங்களையே உங்களுக்குத் தெரியவில்லையா?': கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி

'உங்களையே உங்களுக்குத் தெரியவில்லையா?': கோகுல்ராஜ் கொலை வழக்கில் சுவாதியிடம் நீதிபதிகள் கேள்வி

"கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆஜரான சுவாதி, சிசிடிவி காட்சியில் இருப்பது நானல்ல" என்று கூறினார். " உங்களையே உங்களுக்குத் தெரியவில்லையா?" என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பவும் சுவாதி கண் கலங்கினார்.

நாமக்கல் மாவட்டம் ஓமலூர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் மதுரை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 பேரை குற்றவாளிகள் அறிவித்ததோடு அனைவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இதே போல கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி தரப்பில், வழக்கில் 5 பேர் விடுதலை செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகள் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பாக தொடர்ச்சியாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிறழ்சாட்சியாக மாறிய சுவாதியை காவல்துறை பாதுகாப்புடன் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். அதனடிப்படையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நீதிபதிகள் முன்பு சுவாதி ஆஜரானார்.

அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில், "கோகுல்ராஜ் கல்லூரியில் என்னுடன் பயின்றார். நானும், அவரும் ஒரே வகுப்பு. சக மாணவரைப் போலவே கோகுல்ராஜை எனக்குத் தெரியும். அவர்களோடு பேசுவது போல, கோகுல்ராஜிடமும் பேசியுள்ளேன்" என்றார்.

அவர் வசதி குறைந்த வகுப்பைச் சேர்ந்தவர் என தெரியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பியதற்கு. "தெரியாது" என சுவாதி பதிலளித்தார். கடந்த 2015 ஜூன் 23-ம் தேதி, கல்லூரி முடிந்து பின் அன்று என்ன நடந்தது என்பதை கூறுங்கள். மேலும், 7 ஆண்டுகள் ஆகிய நிலையில் நினைவிருக்க வாய்ப்பில்லை. அதனால், தேவையானவற்றை நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதற்கு.," அன்று காலை தான் யாரையும் பார்க்கவில்லை" என சுவாதி கூறினார்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினர். அந்த வீடியோப் பதிவில் கோகுல்ராஜும், சுவாதியும் வருவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோ பதிவில் கோகுல்ராஜுடன் வரும் பெண் யார்? என்று நீதிபதிகள் கேட்டனர்." அது யார் எனத் தெரியாது" என சுவாதி பதிலளித்தார். இதனால் கோபமடைந்த நீதிபதிகள், உங்களையே உங்களுக்குத் தெரியவில்லையா? என கேள்வி எழுப்பினர். நீங்களாக உண்மையைச் சொல்லவில்லை என்றால் அது தொடர்பான வீடியோவை போட்டுக்காண்பித்து, பொய் சொல்லியதாக நடவடிக்கை எடுக்கலாம். அதற்கு அதிகாரம் உள்ளது. குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உள்ளது என நீதிபதிகள் சுவாதியிடம் கூறினர். மீண்டும் இரண்டு முறை வீடியோவைக் காண்பித்தும், அது தான் இல்லை என்று தொடர்ச்சியாக சுவாதி பதிலளித்தார். உண்மையை மனசாட்சிக்கு உட்பட்டு சொல்லுங்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

கோகுல்ராஜ் தரப்பில் வழக்கறிஞர்கள், சுவாதி வேண்டுமென்றே பொய் கூறுவதாக தெரிவித்தனர். இதற்கு நீதிபதிகள், 165-சட்டப்பிரிவின்படி தங்களுக்கு விசாரணை மேற்கொள்வதற்கு முழு அதிகாரம் உள்ளது. எனவே, இருதரப்பினரும் அமைதியாக இருக்குமாறு நீதிபதிகள் கூறினர்.

சிசிடிவி காட்சியில் சுவாதி நடந்து வரும் 10,55 நிமிடக்காட்சியைக் காண்பித்து அது யார் என்று நீதிபதிகள் கேள்வி கேட்டும், சுவாதி, அது தான் இல்லையென்று மறுத்து விட்டார். ஆனால், அருகில் செல்லக்கூடிய ஆண் யார் என்ற கேள்விக்கு மட்டும், "அது கோகுல்ராஜ் போல் உள்ளது" என்று பதிலளித்தார். இதை நீதிபதிகள் பதிவு செய்தனர். இருப்பினும் முகம் சரியாகத் தெரியவில்லை என்று சுவாதி தெரிவித்தார். முகம் சரியாக தெரிந்தால் பதில் கூறுவீர்களா என்று தெரிவித்து மீண்டும் முகம் தெரிவது போன்ற சிசிடிவி காட்சியை நீதிபதிகள், சுவாதியிடம் காட்டினர்.

இந்த நிலையில், கோகுல் ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியாக மாறிய சுவாதியை மீண்டும் புதன்கிழமை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கடைசி வாய்ப்பாக வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது, அன்று ஒரு வாய்ப்பு தருகிறோம், அன்றைய தினம் சுவாதி ஆஜராக வேண்டும். புதன்கிழமை ஆஜராகும்போது இதே நிலை நீடித்தால் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in