‘‘இடதுசாரி கட்சிகள் பிரிவினைவாத அரசியல் செய்கின்றன!’

ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு ஆவேசம்
ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு
ஆந்திர மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜு

ஏழை மக்களின் வாழ்க்கையை மோடி அரசு பரிதாபகரமாக்கிவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா கூறியிருந்த நிலையில், இடதுசாரி கட்சிகள் பிரிவினைவாத அரசியல் செய்வதாக ஆந்திர பாஜக தலைவர் சோமு வீரராஜு குற்றம்சாட்டியிருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அக்டோபர் 14 முதல் 18 வரை நடக்கவிருக்கிறது. இதையொட்டி கட்சியின் தேசிய கவுன்சில் சமீபத்தில் அரசியல் தீர்மான வரைவை வெளியிட்டது. அதில் பாஜகவின் தவறான ஆட்சியால் நாடு கடும் நெருக்கடியில் இருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டது.

இதுதொடர்பாக ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த டி.ராஜா, மோடி அரசின் கொள்கைகள் ஏழை மக்களின் வாழ்க்கையைப் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளிவிட்டதாக விமர்சித்திருந்தார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா

இந்நிலையில், டி.ராஜாவின் கருத்து பிரதமரின் நற்பெயருக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் களங்கம் விளைவிப்பதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார் சோமு வீரராஜு. “இடதுசாரிக் கட்சிகளும் அவற்றின் சித்தாந்தமும் அநாவசியமாகிவிட்டன. இது பல தருணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாரபட்ச அடிப்படையில் கூட்டணி அமைப்பதிலும், தங்கள் வசதிக்கேற்ப பிரித்தாளும் அரசியலை மேற்கொள்வதிலும் அவர்கள் நன்கு பழக்கப்பட்டுவிட்டனர்” என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இதுதொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ‘பிரதமர் மோடி ஆட்சியில் 40 கோடி பேருக்கு ஜீரோ பேலன்ஸ் வங்கிக் கணக்குக தொடங்கப்பட்டிருக்கின்றன. 20 கோடி கியாஸ் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. 15 கோடி குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டிருக்கிறது’ எனப் பட்டியலிட்டிருக்கும் சோமு வீரராஜு, இடதுசாரி கட்சிகள் நிதர்சனத்தைக் கண்டுகொள்ளாமல் இருக்கின்றன என்றும் தேசிய கட்சி எனும் நிலையிலிருந்து மாநிலக் கட்சிகளாக அவை சுருங்கிவிட்டன என்றும் கூறியிருக்கிறார்.

கேரளத்தில் நடந்த தங்கக் கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயனின் பெயர் அடிபட்டதாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்த மோசடிகளில் இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in