‘ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை மிரட்டுகிறது; பேரம் பேசுகிறது பாஜக’ - அதிரவைத்த அர்விந்த் கேஜ்ரிவால்

‘ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்களை மிரட்டுகிறது; பேரம் பேசுகிறது பாஜக’ - அதிரவைத்த அர்விந்த் கேஜ்ரிவால்

கலால் கொள்கை முறைகேட்டுக் குற்றச்சாட்டுகளின்பேரில், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சிபிஐ விசாரணை நடந்துவருகிறது. அவரது வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், தான் பாஜகவில் இணைந்தால் முதல்வர் பதவி வழங்கப்படும் என்றும் தன் மீதான வழக்குகள் கைவிடப்படும் என்றும் பாஜகவினர் பேரம் பேசியதாக மணீஷ் சிசோடியா தெரிவித்த கருத்துகள் ஏற்கெனவே சலசலப்பை ஏற்படுத்தியிருந்தன. தங்கள் கட்சி எம்எல்ஏ-க்களை வளைக்க ஆபரேஷன் தாமரை வியூகத்தை பாஜக பயன்படுத்துவதாகவும் ஆம் ஆத்மி கட்சியினர் புகார் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், இன்று 97 மின்சாரப் பேருந்துகளைத் தொடங்கிவைத்து செய்தியாளர்களிடம் பேசிய அர்விந்த் கேஜ்ரிவால், “ஆம் ஆத்மி கட்சியை உடைக்க உதவினால் லஞ்சம் தரப்படும் என பாஜகவினர் தங்களிடம் சொன்னதாக சில எம்எல்ஏ-க்கள் என்னிடம் கூறினர். இது மிகவும் முக்கியமான பிரச்சினை” என்றார். ஆம் ஆத்மி கட்சித் தலைவர்கள் மீதான சிபிஐ நடவடிக்கை குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் வரை இப்படித்தான் நடக்கும்” என்று அவர் பதிலளித்தார்.

இதுதொடர்பாக விவாதிக்க இன்று மாலை 4 மணிக்கு ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் விவகாரக் குழுக் கூட்டம் தொடங்கியிருக்கிறது,

இதுதொடர்பாகப் பேசிய ஆம் ஆத்மி கட்சி தேசிய செய்தித்தொடர்பாளர் சஞ்சய் சிங், அக்கட்சியைச் சேர்ந்த அஜய் தத், சஞ்சீவ் ஜா, சோம்நாத் பாரதி, குல்தீப் ஆகிய 4 எம்எல்ஏ-க்களை பாஜகவினர் அணுகி பேரம் பேசியதாகக் குறிப்பிட்டார். அந்த எம்எல்ஏ-க்களுடன் நட்பு ரீதியான தொடர்பில் இருக்கும் பாஜகவினர் அவர்களிடம் பேசியபோது, ‘நீங்கள் பாஜகவில் இணைந்தால் 20 கோடி ரூபாய் வழங்கப்படும். இன்னொரு எம்எல்ஏ-வையும் அழைத்துக்கொண்டு வந்தால் 25 கோடி ரூபாய் கிடைக்கும்’ எனக் கூறியதாக சஞ்சய் சிங் தெரிவித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in