பணி நீக்கம் படலத்தில் இணைந்தது சொமாட்டோ: 3% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது

பணி நீக்கம் படலத்தில் இணைந்தது சொமாட்டோ: 3% ஊழியர்களை வீட்டுக்கு அனுப்புகிறது

பணியாளர்கள் வேலை நீக்கம் என்பது புதிய பெருந்தொற்றாக உலகம் முழுக்க பரவி வருகிறது. இந்த வகையில் இந்தியாவின் சொமாட்டோ நிறுவனம் 3 சதவீத ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

நாட்டின் முதன்மையான உணவு விநியோக நிறுவனங்களில் ஒன்று சொமாட்டோ. பெரும் நிறுவனங்கள் பலதும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருவதன் வரிசையில் தற்போது சொமாட்டோவும் சேர்ந்திருக்கிறது. ஊழியர்களின் செயல்பாடு என்பதன் அடிப்படையில் 3% ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் இந்த பணி நீக்க நடைமுறை வழக்கமான வருடாந்திர செயல்பாடு என்றும் நிறுவனத்தின் பல்வேறு துறைகளையும் உள்ளடக்கியதாக இந்த பணி நீக்கம் அமைந்திருக்கும் என்றும் விளக்கம் தந்துள்ளது. ஆனால் சொமாட்டோ குறித்து வரும் செய்திகள் வேறாக இருக்கின்றன. 3 சதவீதம் என்பது சொமாட்டோ நிறுவனத்தில் படிப்படியாக உயர வாய்ப்பிருப்பதாகவும் அவை கவலை தெரிவிக்கின்றன.

உலகம் முழுமைக்குமே பொருளாதார சுணக்கத்தின் ஆரம்ப அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அதன் வெளிப்பாடாக பல்வேறு நிறுவனங்களும் அதிரடி ஆட்குறைப்பில் இறங்கி உள்ளன. ட்விட்டர் பணியாளர்களின் வேலை நீக்கத்துக்கு நிறுவனம் கைமாறியது ஒரு காரணம் என்ற போதும், 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் பணி இழந்ததற்கு அது மட்டுமே இல்லை என்பதே நிதர்சனம். பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா 11 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் சுமார் 13 சதவீத பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பியது. அமேசான், மைக்ரோசாஃப்ட் மற்றும் சிறிதும் பெரிதுமான பல டெக் நிறுவனங்கள் இதில் இணைந்து வருகின்றன. இந்த வரிசையில் இந்தியாவில் கால்பரப்பியிருந்த சொமாட்டோ நிறுவனமும் தற்போது இணைந்திருக்கிறது. இது தற்காலிக தடுமாற்றமா அல்லது சரியும் சீட்டுக்கட்டுகளின் தொடக்க அறிகுறியா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in