வடக்கிலும் தலையெடுக்கும் ஜிகா வைரஸ்

கான்பூரில் 4 பேருக்கு ஜிகா உறுதி
வடக்கிலும் தலையெடுக்கும் ஜிகா வைரஸ்
ஏடிஸ் கொசு

உத்தர பிரதேச மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவலை அடுத்து, அங்கு 500-க்கும் மேற்பட்டோரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில், முதல் ஜிகா வைரஸ் பாதிப்பு அக்.23 அன்று உறுதி செய்யப்பட்டது. இந்திய விமானப் படை அலுவலர் ஒருவர் பாதிக்கப்பட்டதை அடுத்து, அவருடன் தொடர்புடைய மற்றும் வசிப்பிடத்தைச் சார்ந்தோர் ரத்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதில், மேலும் 3 பேருக்கு ஜிகா வைரஸ் பாதித்திருப்பதை நேற்று(அக்.30) மாலை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இவர்களில் 2 பேர் விமானப்படை அலுவலர்கள், ஒருவர் விமானப் படை அலுவலரின் குடும்ப உறுப்பினர் ஆவார்.

இதைத் தொடர்ந்து விமானப்படை அலுவலர்களின் குடியிருப்பு பகுதியை வளைத்த சுகாதாரப் பணியாளர்கள், வீடுதோறும் விசாரித்து வருகின்றனர். மேலும் 500 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஜிகா வைரஸ் பாதிப்பில், நாட்டில் 2-வது பெரிய பரவலாக இது கணிக்கப்படுகிறது. வழக்கமாக கேரளத்தில் ஜிகா வைரஸ் பரவல் தென்படும். இந்த வருடத்தில், சுமார் 60 வரையிலான ஜிகா பாதிப்புகள் கேரளாவில் உறுதி செய்யப்பட்டன. அதற்கு அடுத்தபடியாக கான்பூரில் ஜிகா கண்டறியப்பட்டுள்ளது.

டெங்கு காய்ச்சலை உருவாக்கும் அதே ஏடிஸ் வகையைச் சார்ந்த கொசுவினாலே ஜிகா வைரசும் பரவுகிறது. ஜிகா பாதிப்பின் அறிகுறிகளாக அதிக அளவிலான காய்ச்சல், குளிர், சிவந்த கண்கள், தசை மற்றும் மூட்டு வலி ஆகியவை தென்படும். பாதிக்கப்பட்டவர் கர்ப்பிணியாக இருப்பின் வயிற்றிலிருக்கும் குழந்தை பிறவிக் குறைபாடுகளுடன் பிறக்க காரணமாகிவிடும். எனவே, இந்த மழைக்காலத்தில் கொசுக் கடியில் இருந்தும், வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் கொசுக்கள் வளர்வதற்கான வாய்ப்புகளை தவிர்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in