பிரதமர் குறித்து விமர்சனம்- ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ்!

7 நாளில் விளக்கம் அளிக்காவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடியை விமர்சிக்கும் விதமாக நிகழ்ச்சியை ஒளிப்பரப்பியது குறித்து விளக்கம் அளிக்க ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. "இது குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் சிறுவர்கள் நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதில் இரண்டு சிறுவர்கள், மோசமான ஆட்சியாளர் குறித்து மன்னர், அமைச்சர் வேடமிட்டு விமர்சனம் செய்திருந்தனர். மேலும் பண மதிப்பிழப்பு, அரசு நிறுவனங்களை தனியார்மயம் ஆக்குதல் போன்றவை குறித்தும் விமர்சனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ``ஜீ தமிழ் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமரின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி மத்திய இணை அமைச்சர் முருகன் என்னை தொடர்புக்கொண்டு கேட்டறிந்தார். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். ஜீ தமிழ் நிகழ்ச்சி விவகாரத்தில் அவர்கள் அனைவரும் பொது இடங்களில் மன்னிப்பு கோர வேண்டும் இல்லையெனில் நீதிமன்றம் வரை சென்று வழக்கு தொடர்வோம்" என்று கூறியிருந்தார்.

நோட்டீஸ்
நோட்டீஸ்

"ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு அச்சுறுத்தலும், மிரட்டலும் விடுக்கும் பாஜகவின் போக்கு கடும் கண்டனத்திற்குரியது. பாஜகவின் ஆட்சி குறித்து அந்நிகழ்ச்சியில் நேரடியாக விமர்சிக்கப்படாதபோதும்கூட அத்தொலைக்காட்சியின் மீது அதிகாரத்தின் மூலம் அடக்குமுறையை ஏவிவிடத்துடிக்கும் பாஜகவின் செயல்பாடு கருத்துரிமை மீதானக் கோரத்தாக்குதலாகும்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கூறியிருந்தார்.

இந்நிலையில், நிகழ்ச்சி குறித்து விளக்கம் அளிக்க ஜீ தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், "15.01.2022 அன்று ஜீ தமிழ் தொலைக்காட்சி சேனலில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் சீசன் 4 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்கு எதிராக இந்த அமைச்சகத்திற்கு புகார் வந்துள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். புகாரின் சாரம் இத்துடன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக 7 நாட்களுக்குள் இந்த அமைச்சகத்திடம் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in