ராகுல் குறித்த திரிக்கப்பட்ட காணொலியை ஒளிபரப்பிய விவகாரம்: ‘ஜீ இந்துஸ்தான்’ அறிவிப்பாளர் அதிரடி கைது

‘ஜீ இந்துஸ்தான்’ செய்தி சேனலின் அறிவிப்பாளர் ரோஹித் ரஞ்சன்
‘ஜீ இந்துஸ்தான்’ செய்தி சேனலின் அறிவிப்பாளர் ரோஹித் ரஞ்சன்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குறித்த, திரிக்கப்பட்ட காணொலியைப் பகிர்ந்த குற்றச்சாட்டின் பேரில் ‘ஜீ இந்துஸ்தான்’ செய்தி சேனலின் அறிவிப்பாளர் ரோஹித் ரஞ்சன் இன்று உத்தர பிரதேசத்தின் காஸியாபாத் நகரில், சத்தீஸ்கர் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

பின்னணி என்ன?

கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினரான ராகுல் காந்தியின் அலுவலகம், ஜூன் 24-ல் மார்க்சிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான இந்திய மாணவர் கூட்டமைப்பினர் (எஸ்.எஃப்.ஐ) நடத்திய பேரணியின்போது தாக்குதலுக்குள்ளானது. அந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அங்கு சென்று பார்வையிட்ட ராகுல் காந்தி, தாக்குதலில் ஈடுபட்டவர்கள் சிறார்கள் என்றும் அவர்களுக்கு எதிராகத் தனக்குக் கசப்புணர்வோ பகை உணர்வோ இல்லை என்றும் கூறியிருந்தார்.

விளைவுகள் பற்றி அறியாமல் பொறுப்பற்ற முறையில் நடந்துகொண்ட அவர்களை மன்னித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசும் காணொலியும் வெளியானது. தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய சங்கடத்தை உணர்ந்து வயநாடு மாவட்டக் கிளையைக் கலைக்க எஸ்.எஃப்.ஐ முடிவெடுத்தது.

இதற்கிடையே, முகமது நபி குறித்த நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டதாக ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால், மத அடிப்படைவாதச் சிந்தனை கொண்டவர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.

இந்தச் சூழலில், தனது வயநாடு அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய மாணவர் அமைப்பினர் தொடர்பாக ராகுல் காந்தி தெரிவித்த மென்மையான கருத்துகளை, உதய்ப்பூர் படுகொலையில் தொடர்புடையவர்கள் குறித்து சொன்னதாகத் திரித்து காணொலி ஒன்று வெளியானது. கன்னையா லாலைப் படுகொலை செய்தவர்கள் குறித்து பரிவுணர்வுடன் ராகுல் காந்தி பேசியதுபோன்ற தோற்றத்தை அந்தக் காணொலி உருவாக்கியது.

அந்தக் காணொலியை ‘ஜீ இந்துஸ்தான்’ இந்தி செய்தி சேனல் ஜூலை 1-ம் தேதி இரவு 9 மணிக்கு ஒளிபரப்பியது. அந்த சேனலின் அறிவிப்பாளர் ரோஹித் ரஞ்சன் அது குறித்து அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பின்னர் அது திரிக்கப்பட்ட காணொலி என்பதை உணர்ந்ததும், அதை நீக்கியதுடன் சேனல் சார்பில் மன்னிப்பும் கோரப்பட்டது.

எனினும், ‘ஜீ இந்துஸ்தான்’ சேனல் மீது காங்கிரஸ் கட்சியின் ஊடகம் மற்றும் விளம்பரப் பிரிவுத் தலைவர் பவன் கேரா புகார் பதிவுசெய்தார். இதையடுத்து அந்த சேனல் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. இதுபோன்ற தவறுகளை அந்த சேனல் மீண்டும் மீண்டும் செய்வதாகவும், தற்போது அந்தக் காணொலியை நீக்கிவிட்டாலும் ஏற்கெனவே ராகுல் காந்திக்குப் பாதகம் விளைவிக்கப்பட்டுவிட்டதாகவும் பவன் கேரா குற்றம்சாட்டினார். சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது.

இன்று காலை சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரக் காவல் துறையினர் தன்னைக் கைதுசெய்ய தனது வீட்டுக்கு வந்திருந்ததாகவும், இது குறித்து உள்ளூர் போலீஸிடம் எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் ரோஹித் ரஞ்சன் தெரிவித்திருக்கிறார். ஆனால், அப்படியெல்லாம் தகவல் தெரிவிக்குமாறு சட்டம் எதுவும் இல்லை என்று ராய்ப்பூர் போலீஸார் விளக்கமளித்திருக்கின்றனர்.

இதுகுறித்து கவனத்தில் கொண்டிருப்பதாகவும், இந்திரபுரம் காவல் நிலைய போலீஸார் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என காஸியாபாத் போலீஸார் ட்வீட் செய்திருக்கின்றனர்.

ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்
ராஜ்யவர்தன் சிங் ரத்தோர்

பாஜகவினர் மீதும் புகார்

திரிக்கப்பட்ட அந்தக் காணொலியை சமூக ஊடகங்களில் பாஜக தலைவர்களும் பகிர்ந்திருந்தனர். இதையடுத்து, பாஜக எம்.-பி-க்களான ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், சுப்ரத் பதக் உள்ளிட்ட ஐந்து பேர் மீது டெல்லி, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் சார்பில் புகார்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

இதுதொடர்பாக, பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவுக்குக் கடிதம் எழுதிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், அந்தக் காணொலியைப் பகிர்ந்தமைக்காக பாஜக தலைவர்கள் மன்னிப்பு கோர வேண்டும் அல்லது சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டின் மத நல்லிணக்கத்தைக் குலைக்கும் வகையில் போலிச் செய்தியைப் பரப்பிய ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவுசெய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பிரிவின் பொறுப்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in