‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வளையத்தில் மேற்கு வங்க ஆளுநர்: பின்னணி என்ன?

சி.வி.ஆனந்த போஸ்
சி.வி.ஆனந்த போஸ்

மேற்கு வங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்-க்கான பாதுகாப்பு வளையத்தை , ’இஸட் பிளஸ்’ தகுதிக்கு உயர்த்தி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இது மத்திய உள்துறை அமைச்சருக்கு வழங்கப்படும் உச்ச பாதுகாப்பு வளையம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்தீப் தன்கரை கடந்த ஆண்டு மத்தியில் குடியரசு துணைத் தலைவருக்கான வேட்பாளராக பாஜக கூட்டணி அறிவித்தது. இதனால் ஆளுநர் பதவியை தன்கர் ராஜினாமா செய்ய, மணிப்பூர் ஆளுநரான இல.கணேசன் மேற்கு வங்க பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த சூழலில் மேற்கு வங்க மாநிலத்துக்கு என நவம்பர் இறுதியில் சி.வி.ஆனந்த போஸ் நியமிக்கப்பட்டார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சி.வி.ஆனந்த போஸ் கேரளத்தை சேர்ந்தவர். இவரது தந்தை வாசுதேவன், சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் தேச விடுதலைப் போரில் பங்கெடுத்தவர். சுபாஷ் நினைவாக மகன் பெயரிலும் ’போஸ்’ சேர்த்திருந்தார் வாசுதேவன். ஐஏஎஸ் முடித்த சி.வி.ஆனந்த போஸ், கொல்லம் மாவட்ட ஆட்சியர் என்பதில் தொடங்கி கேரள மாநிலத்தின் முதன்மைச் செயலர் வரை பல்வேறு மாநில பொறுப்புகளை, தொடர்ந்து மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.

ஓய்வு பெற்றதும் 2019 மக்களவை தேர்தலின்போது பாஜகவில் இணைந்தவர், அதன் பிறகான பாஜக அரசின் பல்வேறு நலத்திட்டங்களை வடிவமைக்கும் குழுக்களில் பங்கேற்றுள்ளார். மேற்கு வங்க ஆளுநராக சி.வி.ஆனந்த போஸ் பதவியேற்ற பிறகும், ஜக்தீப் தன்கர் அளவுக்கு மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அரசு மற்றும் அரசியல்வாதிகளுடன் பெரியளவில் உரசல் இன்றியே செயல்பட்டு வருகிறார்.

அண்மையில், சி.வி.ஆனந்த போஸ் உயிருக்கு அச்சுறுத்தல் என்பதாக உள்துறை அமைச்சகத்துக்கு கிடைத்த நுண்ணறிவு தகவல்களின் அடிப்படையில், உடனடியாக அவருக்கு ’இஸட் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தின் தேர்தல் வன்முறைகள் குறித்து ஆராயும் விசாரணைக் குழுவில் சி.வி.ஆனந்த போஸ் பங்கேற்றதும், முக்கிய முடிவுகள் எடுத்ததும், அவருக்கு எதிரான தற்போதைய அச்சுறுத்தலுக்கு காரணமாக இருக்கும் என அனுமானிக்கப்படுகிறது.

’இஸட் பிளஸ்’ பாதுகாப்பு என்பது, பிரதமர் மற்றும் முன்னாள் பிரதமர்களுக்கு வழங்கப்படும் உச்சபட்ச பாதுகாப்புக்கு அடுத்த நிலையில் வழங்கப்படும் பாதுகாப்பு வளையமாகும். 55 பாதுகாப்பு அதிகாரிகளை உள்ளடக்கிய பாதுகாப்பு வளையத்தில் 10-க்கும் மேற்பட்ட என்எஸ்ஜி கமாண்டோக்கள் பங்கு வகிப்பார்கள். இந்த இஸட் பிளஸ் பாதுகாப்பு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்திரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in