போலி வீடியோவை பரப்பிய பீகார் யூடியூப்பருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் மணீஷ் காஷ்யப்
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்படும் மணீஷ் காஷ்யப் போலி வீடியோவை பரப்பிய பீகார் யூடியூப்பருக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு

புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் தொடர்பான போலி வீடியோவைப் பரப்பிய பீகாரைச் சேர்ந்த யூடியூப்பரை இம்மாதம் 5-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள்  சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார் இவை போலி என கண்டறிந்ததுடன், புலம்பெயர் தொழிலாளர்களிடையே பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

இந்நிலையில் பீகாரைச் சேர்ந்த யூடியூப்பரான மணீஷ் காஷ்யப் என்பவர்தான் இந்த போலி வீடியோவை பரப்பியதாக தமிழக போலீஸார் கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை உள்ளிட்ட 13 இடங்களில் மணீஷ் காஷ்யப் மீது வழக்குகள் பதிவாகின. மேலும் மணீஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீஸாரும் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் நீதிமன்ற ஆணையினை பெற்ற போலீஸார், பீகார் சென்று யூடியூப்பர் மணீஷ் காஷ்யப்பை கைது செய்தனர். அங்கிருந்து மதுரை அழைத்து வரப்பட்ட அவரை கடந்த 30-ம் தேதி மதுரை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர் படுத்தினர்.  மணீஷ் காஷ்யப்பை ஏப். 3-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். 

இந்நிலையில் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மணீஷ் காஷ்யப் இன்று மீண்டும் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது சைபர் கிரைம் போலீஸார் சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் குற்றம்சாட்டப்பட்ட நபரை விசாரிக்க மேலும் 7 நாட்கள் போலீஸ் காவலுக்கு அனுமதிக்க வேண்டும் என கோரினார்.


இதனை விசாரித்த மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி டீனா பானு, போலீஸாரின் காவல் குறித்து ஏப்ரல் 5-ம் தேதி முடிவு செய்வதாகவும், அதுவரை மணீஷ் காஷ்யப்பை நீதிமன்ற காவலில் வைத்திருக்கவும் உத்தரவிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in