திருச்சியை தெறிக்கவிட்ட பைக் ரேஸர் அசார்: டயரை பஞ்சராக்கி 11 ஆயிரம் அபராதம் விதித்தது போலீஸ்!
திருச்சியில் இளைஞர்களை திரட்டி மாநகர சாலைகளில் பைக் ரேஸ் சென்ற யூ டியூப்பர் அசாருக்கு 11 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டிச் சென்று அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுபவர். திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்த அசார் நேற்று மாலை திருச்சி நீதிமன்றம் அருகே காவல்துறை அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் ஊர்வலமாக சென்றது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
தமிழகத்தின் மத்திய மாவட்டமான மலைக்கோட்டை மாநகர் ஏற்கெனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகிறது. தினம் ஒரு விபத்துகள் நடந்து வருகிறது. இந்தநிலையில் திருச்சியை பூர்வீகமாக கொண்ட அசார் என்பவர் இருசக்கர வாகனத்தை அசாத்தியமாக ஓட்டிச்சென்று, அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

இவர் வைத்திருக்கும் 1000 RR வகை இருசக்கர வாகனத்தின் விலை 20 லட்சம் ரூபாய் என்பதால் இளைஞர்களின் ஆதரவு இவருக்கு அதிகம் உண்டு. விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் சப்ஸ்கிரைபர்கள் இருந்த நிலையில் அவர் பதிவிட்ட அலப்பறை வீடியோக்களால் சப்ஸ்கிரைபர்கள் எண்ணிக்கை தற்போது 1.20 லட்சமாக உயர்ந்துள்ளது. இவரது யூடியூப் பக்கத்தில் இளைஞர்கள் பட்டாளத்தோடு அதிவேகமாக பைக் ஓட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை தொடர்ந்து, இந்த அசார் செல்லும் இடமெல்லாம் இளைஞர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. இந்தநிலையில், முன்கூட்டியே தனது ரசிகர்களுக்கு சமூக வலைதளம் மூலம் திருச்சி வருவதை அறிவித்த அசார், குறித்த நேரத்தில் விலை உயர்ந்த பைக்குடன் வந்தார்.
இதனை அறிந்த ரசிகர்கள் அசாரை காண குவிந்தனர். திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள எம்ஜிஆர் சிலையில் தொடங்கிய பைக் ரேஸ் திருச்சி மாநகரின் பிரதான சாலையில் பயணமானது. இளைஞர்களின் கூச்சல் சத்தத்துடன் சென்ற அவரை பின்தொடர்ந்து பைக்கில் அதிவேகமாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் திருச்சி மாநகரை சுற்றியுள்ளனர்.
இதனால் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இளைஞர்களின் இந்த அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்தது. இந்த நிலையில் உஷாரான திருச்சி மாநகர காவல்துறை, அசார் சென்ற வழியை மறித்து அந்த பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வண்டியை பஞ்சர் ஆக்கினர்.
பின்னர் காவல்துறை அனுமதி இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களுடன் ஊர்வலமாக சென்றதாகக்கூறி அசாருக்கு 11,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் திருச்சியில் பெரும் பரபரப்பு நிலவியது.