அமெரிக்க முன்னாள் அதிபரின் யூடியூப் சேனலுக்கு தடை நீங்கியது

டொனல்டு ட்ரம்ப்
டொனல்டு ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு ட்ரம்பின் பிரத்யேக யூடியூப் சேனல் மீதான தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வரிசையில் யூடியூப் சேனலையும் தடை விலகி திரும்பப் பெற்றிருக்கிறார் ட்ரம்ப்.

2021, ஜனவரி 6 அன்று ட்ரம்பின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது. அவரது ஆதரவாளர்கள் வாஷிங்டனில் அப்போது மேற்கொண்ட கிளர்ச்சி நடவடிக்கைகளை அடுத்து, ட்ரம்ப்பின் யூடியூப் சேனலில் புதிய வீடியோ எதையும் பதிவேற்றம் செய்ய வழியின்றி முடக்கப்பட்டது. மேலும் 26 லட்சத்துக்கும் மேலானோர் பின்தொடரும் அவரது சேனலின் பழைய வீடியோக்களில் எவரும் பின்னூட்டம் இடுவதற்கும் தடை விழுந்தது.

யூடியூப் மட்டுமன்றி, இதர சமூக ஊடகங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலும் ட்ரம்ப்புக்கு அப்போது தடை விதிக்கப்பட்டிருந்தது. ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்களின் கருத்துக்கள், வன்முறையைத் தூண்டும் வகையில் இருந்ததான புகார்கள் எழுந்ததை அடுத்து, இந்த நடவடிக்கைகளை சமூக ஊடக நிர்வாகங்கள் மேற்கொண்டன.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதும், அதுவரை தடையிலிருந்த பல்வேறு ட்விட்டர் கணக்குகளுக்கு அவர் உயிர் தந்ததன் வரிசையில் ட்ரம்பும் சேர்ந்தார். ட்விட்டர் மட்டுமன்றி, முடக்கப்பட்டிருந்த மெட்டா நிறுவனத்தின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளும் ட்ரம்ப்புக்கு திரும்ப கிடைத்தன.

ட்விட்டரில் தான் தடை செய்யப்பட்டதும் வெகுண்ட ட்ரம்ப், ட்விட்டரை ஒத்த ட்ரூத் என்ற போட்டி சமூக ஊடக செயலியை சொந்தமாக ஆரம்பித்தார். ட்விட்டரில் அவரை சுமார் எட்டரை கோடி பேர் பின்தொடர்ந்த நிலையில், ட்ரூத்தில் அதன் அதிபரான ட்ரம்பை பின்தொடர்வோர் எண்ணிக்கை அரை கோடியை மட்டுமே எட்டியது.

அடுத்து வரும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கும் ட்ரம்ப்புக்கு, முடக்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் திரும்ப கையளிக்கப்படுவதன் வரிசையில் இன்று யூடியூப், மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ஆனால், அவ்வாறு மீளக்கிடைத்த தனக்கான சமூக ஊடக கணக்குகள் எதையும் இன்னமும் ட்ரம்ப் திரும்பி பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in