கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் மாயம்

கொள்ளிடத்தில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: மீன்பிடிக்கச் சென்ற மூன்று பேர் மாயம்

கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக கும்பகோணம் அருகே பந்தநல்லூர் கொள்ளிடம் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நான்கு பேர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களின் நிலை என்ன என்பது தெரியவில்லை.

கொள்ளிடம் ஆறு
கொள்ளிடம் ஆறு

கர்நாடகத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி, அதிலிருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள மேட்டூர் அணை முழுவதுமாக நிரம்பி விட்டது. அதனை அடுத்து மேட்டூரில் இருந்து கடந்த மூன்று தினங்களாக வினாடிக்கு ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடி நீ காவிரியில் திறந்து விடப்படுகிறது. அந்த நீர் காவிரி பாசனத்துக்கு போக மீதம் உள்ளவை கொள்ளிடம் ஆற்றில் பிரித்து விடப்படுகிறது.

இதனால் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த எச்சரிக்கையை மீறி பந்தநல்லூர் அருகே மதகு சாலை கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் மகன் கொளஞ்சிநாதன்(34), கலியமூர்த்தி மகன் ஆகாஷ் (24) , சேகர் மகன் மனோஜ் (23) மற்றும் கார்மேகம் மகன் ராஜேஷ் (22) ஆகிய நான்கு இளைஞர்கள் நேற்று இரவு 11 மணி அளவில் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். ஆற்றில் திடீரென அதிகரித்த நீர்மட்டத்தால் அவர்கள் கரை திரும்ப முடியாத நிலை உருவானது.

அதனால் ஆற்றின் நடுவே உள்ள உயரமான மண் திட்டு ஒன்றில் பாதுகாப்பாக ஏறி அமர்ந்து கொண்டு கூச்சலிட்டனர். இவர்களின் கூச்சலைக் கேட்டதும் கரையோரத்தைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்து நான்கு இளைஞர்கள் மணல் திட்டில் அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டு தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த்துறை காவல்துறை ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் ஆற்றில் நீர் மட்டும் வெகுவாக உயர்ந்தது. அனைவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களில் கொளஞ்சிநாதன் மட்டும் மீட்கப்பட்டுள்ளார். மீதமுள்ள மூன்று பேரையும் தேடும்பணியில் தீயணைப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in