
கள்ளக்குறிச்சியில் விவசாயக் கிணற்றில் மின்மோட்டார் வயர்களைத் திருடிய வாலிபரை பிடித்து பொதுமக்கள் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே தண்டலை கிராமத்தில் அதிக கிணறுகள் உள்ளன. இவற்றின் மூலம் அப்பகுதியில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களாக 20-க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகளில் மின்மோட்டார்களின் வயர்கள் திருடு போனது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்த நிலையில், ஏழுமலை என்ற விவசாயி கிணற்றில் இருந்த மின்மோட்டாரின் வயரை ஒரு வாலிபர் இன்று திருடிக் கொண்டிருந்தார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து அந்த வாலிபரைப் பிடித்தனர். அப்போது அவர் தனது உடலில் வயரை சுற்றி அதன் மேல் சட்டை அணிந்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த வாலிபரை அங்கிருந்த கொடிக்கம்பத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் சரமாரியாக அடிக்க ஆரம்பித்தனர். 2 மணி நேரத்திற்கும் மேலாக பொதுமக்கள் தாக்கியதால் அந்த வாலிபர் படுகாயமடைந்தார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கள்ளக்குறிச்சி போலீஸார், அந்த வாலிபரை பொதுமக்களிடமிருந்து அவரை மீட்டனர். இதையடுத்து அந்த வாலிபரைக் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பெருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த சரத்குமார்(27) என்பது தெரிய வந்தது. அவரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.