
தென்காசி மாவட்டத்தில் ஹெல்மெட் போடாமல் வந்த வாலிபரை போலீஸார் தடுத்துநிறுத்தி அபராதம் விதித்தனர். அதனால் ஏற்பட்ட கோபத்தில் போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்காசி மாவட்டம், கிரிவலம்வந்தநல்லூர் காவல்நிலையம் சார்பில் அப்பகுதியில் சோதனைச் சாவடியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அந்த சோதனை சாவடி வழியே பெருமாள்பட்டியைச் சேர்ந்த வீரணன் என்பவரது மகன் காளிராஜ்(26) மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதனால் அங்குப் பணியில் இருந்த தலைமைக் காவலர் தமிழ்செல்வன், காளிராஜிற்கு அபராதம் விதித்துள்ளார்.
இதனால் கோபம் அடைந்த காளிராஜ் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு வீட்டுக்குப்போய் அரிவாள் எடுத்துவந்தார். தலைமைக் காவலர் தமிழ்செல்வன் கழுத்தில் வெட்ட வீசினார். அவர் கையைவைத்துத் தடுக்கவே கையில் வெட்டு விழுந்தது. சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தலைமைக் காவலர் தமிழ்செல்வன் இதுகுறித்துக் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் காளிராஜைக் கைதுசெய்தனர்.
ஹெல்மெட்டிற்கு அபராதம் விதித்ததால் எழுந்த கோபத்தில் போலீஸையே அரிவாளால் வெட்டிய இச்சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.